இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, August 15, 2009

மகளிர் கமிஷனுக்கு மூக்குடைப்பு

சென்னை : மகளிர் போலீஸ் விசாரணையில், மாநில மகளிர் கமிஷன் குறுக்கிட தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, போலீசாருக்கும், மகளிர் கமிஷனுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த, சுவேதா பாது என்பவர் தாக்கல் செய்த மனு: எனக்கும், சதாசிவம் நவீன் செந்தூரான் என்பவருக்கும், 2004ம் ஆண்டு ஈரோட்டில் திருமணம் நடந்தது. நான் பலவகைகளில் துன்புறுத்தப்பட்டேன். என்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். எனது பெயரில் பெசன்ட்நகரில் உள்ள வங்கி லாக்கரில் இருந்த நகைகளை, எனது கணவர் எடுத்துச் சென்றார். ஆபாச வார்த்தைகளில் இ-மெயில் அனுப்பினார்.

அவரது துன்புறுத்தலைப் பொறுக்க முடியாமல், கிண்டி மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். எனது கணவர், மாமியாருக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், எனக்கு எதிராக, மாநில மகளிர் கமிஷனில் எனது மாமியார் மனு கொடுத்தார். விசாரணைக்கு வருமாறு மகளிர் கமிஷன் மிரட்டியது. இதற்கு வக்கீல் மூலம் பதிலளித்தேன். விவாகரத்து கோரி ஈரோடு முதன்மை கோர்ட்டில், சதாசிவம் நவீன் செந்தூரான் வழக்கு தொடுத்துள்ளார். பெண்களின் உரிமையை மகளிர் கமிஷன் பாதுகாக்க வேண்டும். புகார் மீது விசாரணை நடத்த கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், போலீஸ் புலன் விசாரணையில் குறுக்கிட அதிகாரமில்லை.

நான் அளித்த புகாரின் நிலை பற்றி தெரிந்துகொள்ள, கிண்டி மகளிர் போலீஸ் நிலையம் சென்று விசாரித்தேன். எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் போலீசாருக்கு, மகளிர் கமிஷன் தடை விதித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை வேளச்சேரியில் நான் வசித்து வந்த வீட்டுக்கு, சதாசிவம் நவீன் செந்தூரான் வந்தார். அப்போது நான் ஈரோட்டுக்கு சென்றிருந்தேன். கிண்டி மகளிர் போலீசாரும் எனது வீட்டுக்கு வந்து, பூட்டை உடைத்தனர். இதுகுறித்து வேளச்சேரி போலீசில், குடியிருப்போர் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை வந்து எனது வீட்டைப் பார்த்தபோது, அங்கு புதிய பூட்டு பொருத்தப்பட்டிருந்தது. இதனால், வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

கிரிமினல் வழக்கில் புலன்விசாரணையை தடுப்பது, வீட்டுக்குள் செல்லும் உரிமையை மறுப்பது என, மகளிர் கமிஷனின் நடவடிக்கை உள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே, மகளிர் கமிஷனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கிண்டி மகளிர் போலீஸ் விசாரணையில் குறுக்கிட மகளிர் கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி முகோபாதயா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் கீதா ராமசேஷன் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, மாநில மகளிர் கமிஷன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை 17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. போலீசாரின் புலன்விசாரணைக்கு இவ்வழக்கு குறுக்கே நிற்காது என, நீதிபதி முகோபாதயா உத்தரவிட்டுள்ளார்.

==========================

இதுவரை "மருமகள் கமிஷனாக" இருந்தது சற்று நிறம் மாறியதும் மருமகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும்! நல்ல வேடிக்கை. என்னைக்கு இந்த மகளிர் கமிஷன் மகளிருக்கு உண்மையாகவே நல்லது செய்யுமோ?


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.