சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 10, 2009

அது ஒரு கனாக் காலம்

அது ஒரு கனாக் காலம்!

இது சினிமாவின் தலைப்பு அல்ல. இனி வரப்போகும் காலங்களில் இளைய தலைமுறைகளுக்கு இந்திய குடும்ப கலாச்சாரத்தைப் பற்றி ஒரு கனவு போலத்தான் சொல்லமுடியும். ஆனந்த விகடனில் வந்துள்ள கீழுள்ள கட்டுரையைப் படியுங்கள் புரியும். படித்த பிறகாவது விழித்துக் கொள்ளுங்கள். மதி மயங்கி உறக்கத்தில் இருப்பவர்களை தட்டியெழுப்புங்கள். இனி வரப்போகும் தலைமுறைக்கு நல்ல கலாச்சாரத்துடன் கூடிய வாழ்க்கை முறையை காட்
டுங்கள்!


''செக்ஸோட தியரி மாறிடுச்சு..!''

'மகனைக் கொன்று சடலத்தை ஃப்ரிஜ்ஜில் ஒளித்துவைத்த தாய்', 'சொத்துக்களை அபகரிக்க மனைவி, மகள், மாமியாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த கணவன்', 'கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்த மகனையும், கணவனையும் கொல்வதற்குக் கூலி யாட்களை ஏவிய மனைவி!'

செய்தித்தாள்களில் நித்தமும் இந்த விபரீத செய்திகள்தான் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. குடும்பங்களுக்குள் அதிகரித்து வரும் இது போன்ற வக்கிர வன் முறைகளின் உறவுச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கிறார்கள் காவல் துறைக் கூடுதல் ஆணையர் ரவி, ஸ்டான்லி மருத்துவமனை உளவியல் துறைத் தலைவர் டாக்டர் மா.திருநாவுக்கரசு மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நளினி ஆகியோர்.

''எல்லா உயிர்களுக்கும் செக்ஸ் என்பது இனவிருத்தி மட்டும் சம்பந்தப்பட்ட சங்கதி. ஆனால், மனித இனத்தில் மட்டும்தான் செக்ஸ் இனவிருத்தி தவிர சந்தோஷம், பொழுதுபோக்கு, ஆதாயத்துக்காக என்று பல பரிமாணங்களில் கையாளப்படுகிறது. உடலியல் கட்டுப்பாட்டில் இருக்கும் செக்ஸ்... மனம் மற்றும் சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து அணை போடப்படும்போது அதை அத்துமீறத்தான் தூண்டும். அந்த அத்துமீறல் ஒருவித பரவச சுகம் தந்தால், தொடர்ந்து அந்தப் பாதையிலேயே பயணிக்க மனம் பழகிவிடும். அந்தப் பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் சமயம்தான் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழும்!'' என்று செக்ஸ் பற்றி திருநாவுக்கரசு பூடகமாகத் தொடங்கும்போதே இடைமறிக்கிறார் ரவி.

அது போன்ற பிரச்னைகளுக்கு செக்ஸ் மட்டுமே காரணம் கிடை யாதுன்னு நான் சொல்வேன். இதுபோன்ற சங்கதிகளை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்களும் தங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சின்ன விஷயத்தை சென்சேஷன் பண்றோம்னு கள்ளக் காதல், காதல் ஜோடிகள் செய்திகளை பெருசா பப்ளிஷ் பண்றாங்க. ஆனால், உண்மையான காரணங்களைத் தீர விசாரிக்காம விட்டுர்றாங்க. அங்கொண்ணும் இங்கொண்ணுமா நடக்குற ஓரிரு சம்பவங்களை வெச்சு, ஒட்டுமொத்த சமுதாயமே இப்படித்தான் இருக்கோன்னு சங்கடப்படத் தேவை இல்லை. ஊடகங்களின் தாக்கம், கூட்டுக் குடும்பங்களின் மறைவு, மெகா சீரியல்கள், சினிமாவின் கலர்ஃபுல் கனவுகளை நம்புவதால் ஏற்படும் மனமாச்சர்யங்களும் இதற்குக் காரணம்னு சொல்வேன்'' என்கிற ரவியின் கருத்தையே தொட்டுத்தொடர்கிறார் நளினி.

''உதாரணத்துக்கு... டி.வி. சேனல்களில் நடத்தப்படும் பாட்டு, டான்ஸ், பேச்சுப் போட்டிகளில் தோல்வியுற்றதாக வெளியேற்றப்படும் குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, மனசு பதறுகிறது. உலகமே அந்தப் போட்டியோடு முடிந்துவிடப் போகிறது போன்ற சேனல்களின் மாயைக்கு அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனது பாதிக்கப்படுகிறது. நாங்கள் மாணவர்களாக இருந்தபோது எங்களைக் கண்காணிக்க கண்டிக்க பெற்றோர்கள் இருந்தாங்க. ஆனால், இப்போது எல்லாம் வீடுகள் வெறிச்சோடி இருக்கு. தாத்தா, பாட்டிகள் முதியோர் இல்லத்தில் இருக்காங்க. அப்பா, அம்மா ஆபீஸ்ல இருக்காங்க. தனது உலகின் சட்டதிட்டங்களைத் தானே தீர்மானித்துக்கொண்டு அவர்களாக வளர்கிறார்கள்!'' என்று கவலை தெரிவிக்கிறார் நளினி.

தொடர்கிறார் திருநாவுக்கரசு, ''என்கிட்ட வரும் பல பெற் றோர்கள், 'என் பொண்ணு லவ் பண்றா. அவள் மனசை மாத்துங்க'ன்னு கேட்டுதான் வர்றாங்க. பொண்ணுகிட்ட பேசுனா, 'அவன் ரொம்பப் பொறுப்பானவன். நல்ல பையன். என் வாழ்க் கையையே அவன்கிட்ட கொடுக் கப் போறேன். அவனைப் பத்தி நான் முழுசா தெரிஞ்சுக்க மாட் டேனா?'ன்னு கேக்குறாங்க. பெற்றவர்களும் கௌரவமான காதலை மதிக்கக் கத்துக்கணும். அதற்குண்டான மரியாதையைக் கொடுக்கணும். அதே சமயம் காதலை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் போக்கைப் பெண்கள் கைவிடணும்!'' என்று நிறுத்தியவர், சட்டென நளினியிடம் திடீர் கேள்வி கேட் கிறார். ''பெண்களே விரும்பி செக்ஸ் வெச்சுக்கிட்டு பிறகு வீட்டார் தூண்டுதலால் 'கற்பழிச்சுட்டான்'னு கொடுக்குற புகாரினால் எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க... நீங்களே சொல்லுங்க!''

தயக்கமாக ஆமோதிக்கிற நளினி, ''நீங்க சொல்றதும் மறுக்க முடியாத உண்மைதான். மைனர் பெண், மேஜர் பையன் என்று எல்லாம் சர்ட்டிஃபி கேட் பார்த்துக் காதல் வருவது இல்லை. பார்த்தோ, பழகியோதான் காதல் கொள்கின்றனர். தனிமையைப் பயன்படுத்தி இளமை தாகத்துக்குத் தீனி போடுகிறார்கள். காதல் வீட்டுக்குத் தெரிந்ததும் உறவுகளின் மிரட்டலுக்குப் பயந்து பையன் மீது புகார் கொடுக்கிறாள். மைனர் பெண் என்பதால் அவன் மீது கற்பழிப்புப் புகார் பதிவு செய்யத்தான் சட்டத்தில் இடம் இருக்கிறது. சிறைக்குச் செல்கிறான். மனதில் வன்மம் கொள்கிறான். இதனால் இளமைக்காலம் முழுவதையும் தொலைத்த பல ஆண்களை நான் சிறைச்சாலையிலேயே சந்தித்திருக்கிறேன்!'' என்று நளினி நிறுத்த... தொடர்கிறார் ரவி,

''தெளிவாக முடிவெடுக்கும் திறனும், வயதும் வந்த பிறகே காதலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அந்தப் பக்குவத்தைத்தான் பெற்றவர்களும் உறவினர்களும் விடலைப் பருவத்தில் இருப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். 'காதல்' என்று பிள்ளைகள் யோசிக்கத் தொடங்கிவிட்டது தெரிந்தாலே பெற்றோருக்கு உண்டான கெடுபிடிகளைக் களைந்துவிட்டு ஒரு நண்பனாக அவர்களை அணுக வேண்டும்!'' என்று சிம்பிள் ஃபார்முலா சொல்கிறார் ரவி.

''அடலசன்ட் பருவத்தில் இருப்பவர்களுக்கு அது மாதிரியான சிக்கல் என்றால், அதைக் கடந்தவர்களுக்கும் பிரச்னை கள் இல்லாமல் இல்லை. 'எனக்கு செக்ஸ்ல இன்ட்ரஸ்ட் கிடையாது. கணவரோட விருப்பத்துக்காகத்தான் செய் றேன்'னு நம்ம ஊர் பெண்கள் சொல்வாங்க. ஆனால், வெளி நாட்டுப் பெண்கள், 'எனக்கு இதுதான் பிடிக்கும்... இப்படித்தான் இருக்கணும்... இவன்தான் வேணும்'னு கேக்குற அளவுக்கு சுதந்திரமா இருக்காங்க. இங்கே செக்ஸை இலைமறை காய்மறையாக ஒரு தீண்டத்தகாத சங்கதி போல மூடி மறைப்பதால்தான் வயது வந்த அனுபவம் நிரம்பிய பெரியவர்களே தடம் மாறுறாங்க. இத்தனைக்கும் செக்ஸ்ல நம்ம ஆட்களுக்கு அத்தனை ஆர்வம். ஆனா, அதைப் பத்தி வெளிப்படையாகப் பேசி விவாதிக்கக் கூடிய சூழல் இங்கே கிடையாது. கிட்டத்தட்ட 25 வயசு வரை செக்ஸைப் பத்தி எந்த விழிப்பு உணர்வும் ஏற்படுத்தாம திடீர்னு ஒரே ராத்திரியில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துன்னு ஒப்படைச்சா பல ஆண்களுக்கு என்ன செய்யிறதுன்னே தெரியாது. அதில் ஏமாற்றத்தைச் சந்திக்கும் பெண்கள் வேற வழியில்லாமல் தங்கள் இயற்கை உந்துதலைத் தணித்துக்கொள்ள வேறு ஆணை நாடுகிறார்கள். அதற்குத்தான் நாம் 'கள்ளக் காதல்' என்று அடைமொழி கொடுக்கிறோம். அந்தப் பதத்தையே அகராதியில் இருந்து அழிச்சாக்கூட நல்லது!'' என்கிறார் திருநாவுக்கரசு.

''இப்ப செக்ஸோட பரிணாமமும், பயன்பாடும் மாறிடுச்சு. அன்பை வெளிப்படுத்த, ஆளுமையை நிரூபிக்க, அரவணைப்பை இன்பமாக நிலைநாட்ட, பழிவாங்க, பணம் சம்பாதிக்க, பாசத்தை உணர்த்துவதற்குன்னு செக்சுக்கான பயன்பாடுகள் பல தளங்களில் பயணிக்குது.

செக்ஸ் மூலமாக ஒரு விஷயத்தைச் சாதிக்க முடியாதபோது ஆத்திரம் வரும். அதுதான் விபரீதங்களுக்கான வீரிய விதை. சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை. அது உடம்புலயே இருக்குங்கிறது பழைய தியரி. ஆனா, இப்ப நிறைய விஷயம் படிக்கிறாங்க, தெரிஞ்சுக்கிறாங்க. அதை எல்லாம் பிராக்டிக்கலா அனுபவிச்சுப் பார்க்கணும்னு துடிக்கிறாங்க. அந்தக் காலத்தில் செக்ஸ் வெச்சுக்கிட்ட பிறகுதான் விவகாரங்கள், வேறுபாடுகள் கிளைவிடும். ஆனா, இப்ப செக்ஸ்ல ஈடுபடுவதற்கான முனைப்புகளிலேயே பூகம்பங்கள் வெடிக்குது.

'அப்படி எல்லாம் செய்யக் கூடாது. தப்பு, பாவம்'னு அட்வைஸ் பண்ணா மறைக்க ஆரம்பிச்சுடுவாங்க. அந்த மாதிரி மனரீதியான பிரச்னைகளுக்கு விஞ்ஞானபூர்வமான, ஆக்கபூர்வமான தீர்வுகள் உண்டுனு நாம புரிஞ்சுக்கிட்டு அதைச் சம்பந்தப்பட்டவங்களையும் உணர வெச்சுட்டா எந்தச் சிக்கலும் இருக்காது!'' என்று திருநாவுக்கரசு முடிக்க, அதை அமைதியாக ஆமோதிக்கிறார்கள் மற்ற இருவரும்!

--------------------------------------------------
Courtesy:ஆனந்த விகடன்
தமிழ் சரவணன்


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.