இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 22, 2011

பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியைக் கேட்க ஆளில்லை

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் கொட்டத்தை அடக்க எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் கிடையாது.

பின்வரும் செய்தியில் பாருங்கள் ஒரு மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய பெற்றோர்களே முயற்சி செய்திருக்கிறார்கள்.


பிளஸ் 2 மாணவிக்கு கட்டாய திருமணம் நிறுத்தம் : அதிகாரிகள், சைல்டுலைன் அமைப்பு அதிரடி
ஜூலை 23,2011 தினமலர்

திருச்சி : திருச்சி அருகே, "மைனர்' பெண்ணான, பிளஸ் 2 மாணவிக்கு செய்ய முயன்ற கட்டாய திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த மாணவியை குடும்பத்தினரிடமிருந்து சமூக நலத்துறை அதிகாரிகளும், "சைல்டுலைன்' அமைப்பும் மீட்டுள்ளது. திருச்சி, கல்லணை அருகேயுள்ள குத்தாபுரத்தைச் சேர்ந்த விவசாயி மகள் சத்யா, 16 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், திருச்சியில் உள்ள பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கிறார். இவரது குடும்ப வறுமை காரணமாகவும், உறவினர்களின் வற்புறுத்தலின் பேரிலும் சத்யாவுக்கும், உறவினரான திருச்சி, காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம், 30, என்ற லாரி டிரைவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

திருமணத்தில் விருப்பம் இல்லாத சத்யா, பெற்றோரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சத்யாவை, 10 நாட்களுக்கு முன், முருகானந்தம் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டனர். இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த சத்யா, தன் உறவினர்கள் மூலம் திருமணத்தை நிறுத்த முயன்றார். ஆனால், முடியவில்லை.

சத்யாவை வீட்டில் அடைத்து வைத்து, திருமணத்துக்கு சம்மதம் வாங்க மாப்பிள்ளை வீட்டார் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், திருச்சி, "சைல்டுலைன்' அமைப்புக்கு வந்த போனில், "காட்டுப்புத்தூரில் மைனர் பெண்ணான, பிளஸ் 2 மாணவி திருமணத்துக்காக கட்டாயப்படுத்தி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்' என, ஒருவர் கூறியுள்ளார். அந்த தகவலின் பேரில், சைல்டுலைன் அமைப்பினரும், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பேச்சியம்மாள் ஆகியோர், முசிறி டி.எஸ்.பி., இளங்கோவன் உதவியுடன் போலீசாரை அழைத்துக் கொண்டு காட்டுப்புத்தூர் விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் மாணவியை மாப்பிள்ளை வீட்டார், அவருடைய அப்பாவுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டனர். அதன் பின், சமூக நல அலுவலரும், வழக்கறிஞர் ஜெயந்தி ராணியும் நடத்திய விசாரணையில், மாணவிக்கு விருப்பமின்றி திருமணம் நடத்த திட்டமிட்டது உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, மாணவி சத்யா, பெற்றோருடன் காட்டுப்புத்தூர் வரவழைக்கப்பட்டார். அங்கு மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மாணவிக்கு 16 வயதே முடிந்துள்ளது என்பதும், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, வழக்கறிஞர் ஜெயந்தி ராணியும், சைல்டுலைன் அமைப்பினரும் மாணவியை திருச்சி சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.அதற்கு முன், சத்யா தங்களுக்கு எதிராக விசாரணையில் கூறியதால், தங்களுக்கும், சத்யாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டு, பெற்றோர் தங்கள் ஊருக்கு திரும்பிச் சென்று விட்டனர்.

திருச்சி அழைத்து வரப்பட்ட சத்யாவை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க, சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) பேச்சியம்மாள், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் மூலமாக முயற்சி மேற்கொண்டுள்ளார். அவரின் படிப்புக்கான செலவை, மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது.

====

இதுபோன்றுதான் பல திருமணங்கள் பெண்ணைப் பெற்றவர்களின் கட்டாயத்தால் நடக்கின்றன. பிறகு சில மாதங்களில் பெண் தனது பெற்றோரை பழிவாங்குவதற்காக கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகளைப் பதிவு செய்து விட்டு சந்தோஷமாக வேறு ஒருவருடன் தனது வாழ்க்கையை தொடர்கிறார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது எவனோ ஒருவன்.

மேலுள்ள செய்தியில் பார்த்தீர்களா. பெண்ணை கட்டாயத்திருமணம் செய்ய முயற்சித்து கொடுமை செய்த பெற்றோர்கள் இது எங்கள் பெண்ணே கிடையாது என்று சொல்லிவிட்டு ஜாலியாக சென்றுவிட்டார்கள்.

திருமணமான பெண்ணை கணவனோ அல்லது அவனது குடும்பத்தாரோ கொடுமை செய்தால் அது உண்மையான புகாரா அல்லது பொய்யானதா என்று சரியாக விசாரிக்காமலேயே அவர்களை தண்டிக்க பல சட்டங்கள் இருக்கின்றன.

ஆனால் பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகளை கொடுமைப்படுத்தி கட்டாயத்திருமணம் செய்துவைத்தால் இதுபோன்ற பெற்றோர்களை தண்டிக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. அதனால் கேட்பதற்கு ஆளில்லை என்பதால் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி அளவிற்கு அதிகமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வரும் பதிவுகளையும் படியுங்கள்.

1. இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி
2. மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்

3. மகளின் வாழ்வை சீரழிக்கும் இந்தியப் பெற்றோர்கள்



2 comments:

dondu(#11168674346665545885) said...

//சத்யாவை வீட்டில் அடைத்து வைத்து, திருமணத்துக்கு சம்மதம் வாங்க மாப்பிள்ளை வீட்டார் முயற்சித்துள்ளனர்.//
அவங்களுக்கும் தண்டனை அவசியம்தானே.

//இதுபோன்றுதான் பல திருமணங்கள் பெண்ணைப் பெற்றவர்களின் கட்டாயத்தால் நடக்கின்றன. பிறகு சில மாதங்களில் பெண் தனது பெற்றோரை பழிவாங்குவதற்காக கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகளைப் பதிவு செய்து விட்டு சந்தோஷமாக வேறு ஒருவருடன் தனது வாழ்க்கையை தொடர்கிறார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது எவனோ ஒருவன்.//
இந்த விஷயத்தில் இந்த மாப்பிள்ளையை அப்பாவி என்பீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெண்கள் நாட்டின் கண்கள் said...

Blogger dondu(#11168674346665545885) said...

//சத்யாவை வீட்டில் அடைத்து வைத்து, திருமணத்துக்கு சம்மதம் வாங்க மாப்பிள்ளை வீட்டார் முயற்சித்துள்ளனர்.//
அவங்களுக்கும் தண்டனை அவசியம்தானே.

கண்டிப்பாக. இந்திய சட்டம் மாப்பிள்ளை வீட்டாரை மட்டும்தான் தண்டிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் எது செய்தாலும் தவறே இல்லை என்கிறது.

மேற்கண்ட செய்தியில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை தானாக கடத்திக்கொண்டு செல்லவில்லை. பெண்ணைப் பெற்றவர்களே மாப்பிள்ளை வீட்டாருக்குத் துணை போயிருக்கிறார்கள். தான் பெற்ற பெண்ணுக்கு பெற்றோரே செய்யும் கொடுமை மன்னிக்கமுடியாத குற்றமாகும்.


//இதுபோன்றுதான் பல திருமணங்கள் பெண்ணைப் பெற்றவர்களின் கட்டாயத்தால் நடக்கின்றன. பிறகு சில மாதங்களில் பெண் தனது பெற்றோரை பழிவாங்குவதற்காக கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகளைப் பதிவு செய்து விட்டு சந்தோஷமாக வேறு ஒருவருடன் தனது வாழ்க்கையை தொடர்கிறார்கள். கடைசியில் பாதிக்கப்படுவது எவனோ ஒருவன்.//
இந்த விஷயத்தில் இந்த மாப்பிள்ளையை அப்பாவி என்பீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்த செய்தியைப் பொறுத்தவரை மாப்பிள்ளை அப்பாவி என்று இந்தப் பதிவில் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும். மேற்கண்ட செய்தியில் இருப்பதுபோலத்தான் பல கட்டாயத் திருமணங்கள் பெண்ணைப் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது

உங்களது கருத்துக்களுக்கும் ஐயங்களுக்கும் மிக்க நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.