மேலை நாடுகளில் இருப்பதுபோல திருமணத்திற்கு முன் கூடிவாழ்தல், பெண்ணுரிமை என்ற பெயரில் அடுக்கடுக்காக அவசரகதியில் சட்டங்களை இயற்றி குடும்பங்களை அழித்தல், பண்பாட்டை சீரழிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நம்ம ஊருக்கு சற்றும் பொருந்தாத “வெறும் ஸ்டைலுக்காக” மட்டுமே உண்ணப்படும் மேலைநாட்டு உடனடி உணவுகள், நம் நாட்டு சூழலுக்கு சற்றும் பொருந்தாத நாகரீகம் என்ற பெயரில் வரும் கவர்ச்சி உடைகள், Work Culture என்ற பெயரில் குடிகார விடுதிகளில் கூத்தடித்தல் போன்ற எல்லாவற்றையும் கற்றுக்கொண்ட இந்திய மக்கள் மேலை நாடுகளில் மனித உயிருக்குக் கொடுக்கும் மரியாதையை மட்டும் கற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறார்கள்.
மேலைநாடுகளில் உடற்குறை உடையவர்களையும், நோயாளிகளையும், வயதானவர்களையும் மிகுந்த முன்னுரிமை கொடுத்து மரியாதையாக நடத்துவார்கள். ஆனால் இந்த நல்ல விஷயத்தையெல்லாம் நம்ம ஊர் மக்கள் கண்டுகொள்வது கிடையாது. ஒரு செருப்பிற்குக் கிடைக்கும் மரியாதை கூட இந்தியாவில் மனித உயிருக்குக் கிடைப்பதில்லை.
அடுக்கடுக்காக வெடிகுண்டு சம்பவங்கள், கட்டுக்கடங்காத ஊழல்கள் எல்லாவற்றையும் ஒரு நாள் செய்தித்தாளில் படித்து விட்டு அடுத்தநாள் எதுவுமே நடக்காததுபோல அடுத்த சம்பவத்திற்குத் தயாராகிவிடுகிறார்கள் இந்திய மக்கள். இவர்களுக்கு இவையெல்லாம் மரத்துப்போய்விட்டதா? அல்லது சிந்திக்கும் சக்தியில்லாமல் போய்விட்டதா? அல்லது சுயநலமிகளாக மாறிவிட்டார்களா?
புறாவிற்குக்கூட கருணை காட்டி தனது தசையை அறுத்துக்கொடுத்த சிபிச்சக்ரவர்த்தியும், படர்வதற்கு கொம்பில்லாமல் தவித்த முல்லைச் செடிக்குக்கூட கருணை காட்டி தேரையே கொடுத்த பாரியும், பசுவிற்கு நீதி வழங்க தனது மகனையே தேருக்கு பலியாக்கிய மனுநீதிச் சோழனும், அன்னிய அரசாங்கத்தை ஒழிக்க தங்களது சொத்துக்களையும், வாழ்வையும் தியாகம் செய்த பல சுதந்திரப்போராட்ட வீரர்களும் வாழ்ந்த இந்தியா இப்போது மனிதத்தன்மையே இல்லாமல் சீரழிந்துகொண்டிருக்கிறது. தங்களது நாட்டு பண்பாட்டையும் மறந்துவிட்டார்கள், வேறு நாடுகளிலிருந்து நல்ல விஷயங்களை கற்கவும் மறுக்கிறார்கள்.
மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே. ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் பின்வரும் செய்தியில் வந்திருக்கிறது.

குடும்ப நல மேளாகொண்டாடும் திருவாடானை அரசு ஆஸ்பத்திரி வாசலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் முதியவர். (தினமலர் செய்திப்படம் 17/7/2011)
திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில் உயிருக்கு போராடும் முதியவர்:மரத்துப்போனதா மனிதநேயம்
திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில் உயிருக்கு போராடும் முதியவர்:மரத்துப்போனதா மனிதநேயம்
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில், கடந்த ஐந்து நாட்களாக முதியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க மறந்து போனது மனிதநேயம். திருவாடானை- தொண்டி ரோட்டில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில், நிழற்குடையில் படுத்திருந்தார். சிலர் அவரை திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாட்கள் கடந்த நிலையில், அவரை பார்க்க யாருமே வரவில்லை.
No comments:
Post a Comment