இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 22, 2011

காவல் - நீதித்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்ட பெண்கள்!

பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் பொதுவாக காவல்துறையையும், நீதிமன்றங்களையும் நாடுவதுதான் வழக்கமாக நடந்துகொண்டிருந்த நடைமுறை. ஆனால் சமீப காலமாக இந்த இரண்டு துறைகள் மீதும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் பல செய்திகள் தினந்தோறும் வந்தவாறு உள்ளன.

இதற்குக் காரணம் நாட்டில் பெருகியுள்ள லஞ்ச ஊழலும், பணியில் நேர்மையின்மையும்தான் காரணம். குறிப்பாக உண்மையான வழக்குகளில் கவனம் செலுத்தாமல் இருத்தல், பொய் வழக்குகளில் வருமானம் இருக்கிறது என்பதால் அதிக கவனம் செலுத்தி பொய்வழக்குக் குப்பைகளை நீதிமன்றங்களில் கொட்டுதல், ஆமையை விட பல ஆயிரம் மடங்கு குறைவான வேகத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்குகள் இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து பெண்களின் மனதில் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு உதாரணமாகத்தான் ஒரு செய்தி வந்திருக்கிறது.

சென்னை : சொத்துக்களை அழித்ததுடன், செக்ஸ் டார்ச்சர் செய்த கணவனை, கூலிப்படை மூலம் கொலை செய்த மனைவி, போலீசில் சரணடைந்தார். கூலிப்படையைப் பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, வடபழனி, வ.உ.சி., முதலாவது குறுக்குத் தெருவில் உள்ள, குட்வில் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வருபவர் பிரசன்னா,42; அண்ணா சாலையில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். இவர், பழம்பெரும் நடிகர் நம்பியின் மகன். இவரது மனைவி உமா மகேஸ்வரி,40. இவர்களுக்கு, ஐஸ்வர்யா,17, என்ற மகளும், ஆகாஷ்,13, என்ற மகனும் உள்ளனர். இவர்கள், அருகில் உள்ள பள்ளியில், பிளஸ் 1 மற்றும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடியிருந்து வரும் பிரசன்னா, சில ஆண்டுகளுக்கு முன், "சுகுணா சிக்கன்' கடை நடத்தி வந்தார். நேற்று காலை 7:30 மணிக்கு வடபழனி போலீஸ் நிலையத்திற்கு, 121வது வார்டு பெண் கவுன்சிலர் புஷ்பரூத்துடன் வந்த உமா மகேஸ்வரி, கணவரை கொலை செய்து விட்டதாக, போலீசிடம் தெரிவித்தார். போலீசார், உமாவின் குடியிருப்புக்குச் சென்ற போது, அந்தக் குடியிருப்பின் மின் மீட்டர் பாக்ஸ் இருக்கும் இடத்தில், கைகள் கட்டப்பட்ட நிலையில், பிரசன்னா பிணமாகக் கிடந்தார். அவரின் உடலில், ஆங்காங்கே ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தன. பிரசன்னாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உமா மகேஸ்வரியை விசாரித்தனர்.

விசாரணையில் தெரிய வந்ததாவது: குடிப்பழக்கம் கொண்ட பிரசன்னாவுக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்து, உல்லாசமாக இருக்க முயன்றார். இதனை உமா கண்டித்ததால், ஆத்திரமடைந்து, மது போதையுடன் சண்டையிட்டார். வயதுக்கு வந்த பெண் இருக்கும் நிலையில், அடிக்கடி செக்ஸ் டார்ச்சரும் கொடுத்தார். பணத் தேவைக்காக, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள உமாவின் குடும்பச் சொத்தை விற்று, அப்பணத்தை, சூதாட்டம், மது அருந்துதல் என செலவிட்டார். இதனால், மனம் வெறுத்துப் போன உமா, குடும்ப நண்பரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான சம்பத் என்பவரிடம்,"கணவரை எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொன்று விட்டால், தொல்லை தீர்ந்து விடும்' என்று தெரிவித்தார்.

சம்பத் இதற்கு ஒப்புக் கொள்ள, நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த கணவரை, கொல்வதற்கு, திட்டம் தீட்டினர். அதன்படி, அதிகாலை 3 மணிக்கு, பிரசன்னாவின் வீடு அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சம்பத், உமாவை தொடர்பு கொண்டு, மேலும் இருவருடன் வீட்டு வாசலில் நிற்பதாகவும், கதவைத் திறந்து விட்டால், பிரசன்னாவைத் தீர்த்துக் கட்டத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உமா கதவை திறந்துவிட்டு, வீட்டிற்கு வெளியில் வந்துவிட்டார். குழந்தைகள் வீட்டின் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இவர்கள் வந்த விவரம் தெரியவில்லை.

சம்பத் மற்றும் அவருடன் வந்த இருவர், வீட்டிற்குள் சென்று, பிரசன்னாவைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை, வீட்டிற்கு வெளியில் உள்ள மின் மீட்டர்கள் அமைந்திருக்கும் பகுதியில் போட்டு, அங்கிருந்த ஒயரை உடலில் வைத்து மின் இணைப்பு கொடுத்து, பிரசன்னாவின் உடலை சடலமாக்கி விட்டுச் சென்று விட்டனர்.

சம்பவத்தின் போது, பிரசன்னாவின் காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால், இது தொடர்பாக போலீசில் தெரிவித்தால், அவர்கள் அடிப்பர் என பயந்த உமா, அப்பகுதியில் உள்ள கவுன்சிலருடன் வந்து, சரண் அடைந்ததாக கூறினார். தொடர்ந்து, உமா மகேஸ்வரியை கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய சம்பத் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலுள்ள செய்தியில் பாருங்கள். தவறான கணவனைப் பற்றி காவல்துறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையாகப் புகார் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டதால் தானாக தனக்கு ஒரு நீதியைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஒரு அபலைப் பெண்.

இல்லையென்றால் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த பிறகு போலிஸைப் பற்றிய எண்ணம் தோன்றி தானாக சரணடைந்தவருக்கு கொலையை செய்வதற்கு முன்பே அதே காவல்துறை மூலம் நிவாரணம் பெறலாம் என்ற எண்ணம் தோன்றவில்லையே? ஏன்?

ஏனென்றால் தற்போதைய நாட்டு நடப்பின்படி அங்கேயெல்லாம் சென்றால் தனது பிரச்சணைக்கு முறையான நிவாரணம் கிடைக்காது என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம் அல்லவா? இதுபோலத்தான் பலருக்கும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்வது. பூனைக்கு மணி கட்டப்போவது யாரோ?

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.