புதுடில்லி: விவாகரத்து ஆன பெண்கள் பயன் பெறும் வகையில், அவர்களையும் விதவை பென்ஷன் திட்டத்தில் டில்லி அரசு சேர்த்துள்ளது. டில்லி மாநில அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கி வருகிறது. 2007ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் 33 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர். நம்பிக்கை இழந்த நிலையில் நிறைய பெண்கள் உள்ளனர். அவர்களில், விவாகரத்து ஆன விதவைகள், குடும்பத்தில் இருந்து பிரிந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவர்.
இவர்களின் நிலையை பரிசீலித்த மாநில அரசு, அவர்களையும் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்தது. அதன்படி, விவாகரத் தான ஏழை பெண்கள் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் பெற தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது. இதற்கு தகுதியாக அவர்கள் டில்லியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் வசித்து இருக்கவேண்டும். வயது வரம்பாக 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வேறு எந்த பொதுத்துறை நிறுவனத்திலும் பென்ஷன் பெறாதவர்களாக இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளது. இவர்கள் பென்ஷன் பெற்று 60 வயதை அடையும் போது, தானாகவே முதியோர் பென்ஷன் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று அறிவித்துள்ளது.
====================================
ஆகா! என்ன அருமையான புத்தாண்டுப் பரிசு!
ஒரு பக்கம் குடும்பங்களை சிதைக்கும் தவறான சட்டங்களான IPC 498A, Dowry Act, Domestic Violence Act போன்றவற்றை எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் பெண்கள் கையில் கொடுத்து விட்டு அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்திப் பொய் புகார் கொடுத்த பிறகு எந்தக் கணவர் இது போன்ற மனைவியுடன் சேர்ந்து வாழ நினைப்பார்.
பிறகு இவர்களுக்கு கணவனால் கைவிடப்பட்ட அபலைப்பெண் என்று சிறப்பு அந்தஸ்த்து வழங்கி மாதாந்திர உதவித்தொகை வழங்க முடிவு செய்திருப்பது எவ்வளவு ஒரு பெரியமனதுடன் செய்யும் செயல். அதாவது கணவர் உயிரோடு இருக்கும் போதே பெண்களை விதவைகள் லிஸ்ட்டில் சேர்த்து அவர்கள் திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா அல்லது விதவையா என்று எதிலுமே இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலைக்குத் தள்ளி பிறகு அவர்களைப் பார்த்து பரிதாபப்படும் செயலுக்குப் பெயர் தான் "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது" என்று சொல்லப்படும் பழமொழியின் அர்த்தமோ?
விரைவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.