வரதட்சணை தடுப்புச் சட்ட நடைமுறை: பெண்களுக்கு இழைக்கப்படும் கொடிய அநீதி
இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே அப்பாவி ஏழைப் பெண்களை வரதட்சணை கொடுமையிலிருந்து காப்பாற்றி எதிர்காலங்களில் ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டுமென்றால் பெண்வீட்டார் கட்டாயம் பணமோ அல்லது பொருட்களோ கொடுக்க வேண்டும் என்ற அவலநிலை மாறவேண்டும் என்பதாகும்.
ஆனால் நல்ல நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டம் இன்றுவரை வெற்றியடையாததற்கு காரணம் பெண்கள் தான். ஆம் பெண்கள் தான் அப்பாவி ஏழைப்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக்கொடிருக்கிறார்கள். நான் இங்கு குறிப்பிடுவது மாமியார்களை அல்ல. படித்த நல்ல பதவியிலுள்ள நகரத்து வாழ் மேல்தட்டு வர்க்க நவநாகரீக இளம் பெண்களை. இவர்கள் தான் அப்பாவி ஏழைப்பெண்களின் வாழ்வை தட்டிப்பறிக்கும் கொடிய செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கிராமங்களில் வாழும் படிப்பறிவில்லாத பல பெண்களைவிட இந்த நகரத்து வாழ் பெண்களுக்கு சட்ட அறிவும் வெளியுலக அனுபவமும் மிக அதிகம். வரதட்சணை கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம் என்று நன்றாகத் தெரியும். ஆனால் எத்தனை நகரத்துப் பெண்கள் வரதட்சணை கொடுக்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்? எதற்கெடுத்தாலும் கணவரும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கேட்டனர் அதனால் தான் நாங்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தோம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இந்தப் பெண்களும் அவரது குடும்பத்தாரும் கூறுவார்கள்.
மேலும் இது போன்ற பெண்கள் கணவருடன் மனவேறுபாடு ஏற்பட்டால் காவல் நிலையத்திற்கு சென்று வரதட்சணை கொடுமை என்று புகார் வேறு எழுதித்தருவார்கள். ஏனென்றால் வரதட்சணை என்பது ஒரு கொடிய சமுதாயக் குற்றம் என்றும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் கொடுக்கும் அந்த புகாரில் திருமணத்திற்கு முன்பே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் இப்போது மேலும் அதிகமாக வரதட்சணை கேட்டு கணவரும் அவரது குடும்பத்தாரும் துன்புறுத்துவதாகவும் கூசாமல் பொய் குற்றச்சாட்டுகளை வேறு அள்ளி வீசுவார்கள்.
கணவர் வரதட்சணை கேட்டாரா இல்லையா என்பதை பிறகு பார்க்கலாம். முதலில் வரதட்சணை என்பது ஒரு குற்றம் என்று அந்தப் பெண்ணிற்கு தெரிந்ததால் தானே காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்கிறார். அப்படியென்றால் திருமணத்திற்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டபோது ஏன் அந்தப்பெண்ணுக்கு அது குற்றமாகத் தெரியவில்லை? அப்படியே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டிருந்தாலும் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் ஏன் வரதட்சணை கொடுக்க சம்மதித்தனர்? வரதட்சணை கொடுத்து திருமணமும் செய்து முடித்து விடுகின்றனர். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று தெரிந்திருந்தாலும் ஏன் இந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்கின்றனர்?
இவர்கள் இது போல வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வதால் தான் வரதட்சணை கேட்பவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள். வசதி படைத்த நகரத்து மேல்தட்டு வர்க்க பெண்கள் வரதட்சணை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் கிராமங்களில் வாழும் வசதியற்ற பெண்கள் வரதட்சணை கொடுக்க வசதியில்லாமல் திருமணம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். அப்படியே உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்கள் காவல்நிலையத்தை அனுகினால் அங்கு ஏற்கனவே நகரத்து மேல்தட்டு வர்க்க பெண்களால் சுயநலத்திற்காக கொடுக்கப்பட்ட பொய் வரதட்சணை கேசுகள் குவிந்து கிடக்கின்றன.
எனவே இந்த உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழைப்பெண்களால் நவநாரீக நகரத்து மங்கைகளால் வளர்த்து விடப்பட்ட வரதட்சணை பழக்கத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுக்கமுடியாமல் மணவாழ்க்கையில் பாதிப்பும் ஏற்பட்டு அதற்கு நிவாரணம் தேடி காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றால் அங்கும் இந்த நகரத்து மேல்தட்டு பெண்களின் குப்பை கேசுகள் தான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதானல் இந்த அப்பாவி ஏழைப் பெண்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கவேண்டிய நீதியும் தடுக்கப்படுகிறது.
இப்போது சொல்லுங்கள் உண்மையான ஏழைப்பெண்களுக்கு கிடைக்கவேண்டிய நல்வாழ்க்கையையும் நீதியையும் தடுப்பது யார்? ஆண்களா அல்லது படித்த மேல்தட்டுவர்க்க பெண்களா? வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் உண்மையான பலன் இந்த ஏழைப்பெண்களுக்கு கிடைக்காமல் தடுப்பது யார்?
ஆண்கள் வரதட்சணை ஏன் கேட்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். வரதட்சணை கேட்பதும் குற்றம் தான் கொடுப்பதும் குற்றம் தான். ஆனால் இதுவரை கேட்பவருக்கு மட்டும் தான் சட்டம் தண்டனை தந்துகொண்டிருக்கிறது. வரதட்சணை கொடுத்தவர்களையோ அல்லது கொடுப்பவர்களையோ இதுவரை பெயரளவிற்கு கூட தண்டிக்கவில்லை என்பது தான் கொடுமையான உண்மை.
போதை மருந்து வாங்கச் சென்றவன் குற்றவாளியா? அல்லது போதை மருந்தை கேட்டவருக்கு அதை கொடுத்தவர் குற்றவாளியா? கொடுத்தவன் மிகப்பெரிய குற்றவாளி, வாங்கியவன் இரண்டாம் தர குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதை விடுத்து வாங்க வந்தவனை மட்டும் துரத்திக்கொண்டிருந்தால் போதை மருந்து விற்பனையை தடை செய்ய முடியுமா? விற்பதற்கே ஆள் இல்லையென்றால் எப்படி வாங்க முடியும். அது போலத்தான் வரதட்சணை கொடுக்க ஆளில்லை என்றால் வாங்குபவர்கள் எப்படி இருக்க முடியும். வரதட்சணை கொடுப்பவர்களை முதலில் கடுமையாக தண்டிக்க வேண்டும். பிறகு வரதட்சணை என்ற வார்த்தை கூட சமுதாயத்தில் இருக்காது.
எனவே வரதட்சணை கொடுப்பவர்களை தண்டிக்காத இன்றைய வரதட்சணை தடுப்புச்சட்ட நடைமுறை மறைமுகமாக வரதட்சணை முறையை ஆதரித்து ஊக்குவித்து சமுதாய அழிவிற்கு வழிவகுக்கிறது. அது போல நகரத்து வாழ் மேல்தட்டு வர்க்கப் பெண்கள் வரதட்சணையை கொடுத்து அதனை சமூகநடைமுறையில் ஊக்குவித்து வருவதால் கிராமப்புற ஏழைப்பெண்கள் நகரத்துப் பெண்களைப் போல வரதட்சணை கொடுக்கமுடியாமல் நசுக்கப்படுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் நகரத்துப் படித்த பணக்காரப்பெண்கள் வரதட்சணை கொடுமையை சமுதாயத்தில் வளர்க்க ஆண்களை ஒரு கருவியாகப்பயன்படுத்தி கிராமத்து ஏழைப்பெண்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். வரதட்சணை தடுப்புச்சட்டமும் அதற்கு துணையாக வரதட்சணை கொடுப்பவர்களை தண்டிக்காமல் பெண்களுக்கெதிராக நடக்கும் இந்த சமுதாயக் கொடுமையை உரம் போட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறது.
இதுவரை காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டுள்ள வரதட்சணை கொடுக்கல் வாங்கல் புகார்களில் எத்தனை வழக்குகள் வரதட்சணை கொடுத்தவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன? நீதிமன்றங்கள் வரதட்சணை கொடுத்தவர்கள் எத்தனை பேரை தண்டித்திருக்கின்றன? இத்தனைக்கும் அனைத்து வரதட்சணை தொடர்பான புகார்களிலெல்லாம் புகார் கொடுப்பவரே தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக எழுதித்தருகிறார்கள்.
அவர்களை தண்டிப்பதில் என்ன தயக்கம்? அதற்கு என்ன காரணம்? இந்த சமூகக் குற்றம் தொடர்ந்து நடக்கவேண்டும் என்பது தான் நோக்கமா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஏழைப்பெண்களுக்கெதிராக இந்த அநீதியை நகரத்துப் பெண்கள் செய்துகொண்டிருப்பார்கள்? வரதட்சணை கொடுப்பவரையும் கடுமையாக தண்டிக்காமல் இருக்கும் வரை எத்தனை வரதட்சணை தடுப்புச் சட்டங்களும், பெண்கள் பாதுகாப்புச்சட்டங்களும் இயற்றினாலும் அவை அனைத்தும் வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாக மட்டுமே இருக்கும்.
இந்த குறைபாடுடைய வரதட்சணை தடுப்புச்சட்டம் அது இயற்றப்பட்டதற்கான நோக்கத்தைத்தான் செய்யமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இதில் இருக்கும் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்த குறைபாடுடைய சட்டங்களை நகரத்து படித்த யுவதிகள் தங்களின் சுயலாபத்திற்காக அப்பாவிகளை பழிவாங்கும் ஆயுதமாக கையில் எடுத்துக்கொண்டு திரிவது தான் சொல்லமுடியாத கொடுமை. இந்தக் கொடுமையையாவது இந்த சட்டங்கள் தடுத்து நிறுத்தினால் சரிதான்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
No comments:
Post a Comment