இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 30, 2010

498A-மனைவிக்கு மரியாதை செய்யும் கணவர்

இந்தியத் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனைவியின் காலைத் தொட்டு என் குடும்ப மரியாதையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் அதை நல்லமுறையில் காப்பாற்று என்று கணவன் மனைவியிடம் வேண்டும் வழக்கம் எல்லாம் இப்போது பழங்காலத்து வழக்கமாகிவிட்டது.

புதுமையை புகுத்தி பெண்களுக்கு விடுதலை கொடுக்கிறோம் என்ற பெயரில் “திருமணமில்லாத கூடிவாழும் முறையை” (Living Together) அரசாங்கமே அறிமுகப்படுத்திவரும் இந்த வேளையில் பழைய முறைப்படி பெண்கள் வாழ்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்று பல புதுமை பேசும் கண்மணிகள் கொடிபிடித்து கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்விளைவாகப் பல பெண்கள் திருமணம் என்பதின் அர்த்தத்தையே புறக்கணித்து கணவனின் குடும்ப மரியாதையை சிதைத்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அழிப்பதற்குத்தான் திருமணம் என்று நினைத்து பொய் வரதட்சணை வழக்குப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கணவர்களும் இந்த புதுமைப் பெண்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப நடந்துகொண்டு பொய்வழக்குப் போடும் மனைவியருக்கு சட்டத்தின் மூலம் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும். இல்லையென்றால் காலத்திற்கேற்ப பெண்கள் மாறிவிட்டாலும் ஆண்கள் இன்னும் மாறாமல் பழைய காலத்து திருமண முறையை பின்பற்ற நினைக்கிறார்கள், ஆண்கள் எல்லாம் புதுமையை விரும்பாத பழமைவாதிகள் என்று முற்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கூட்டம் அப்பாவி கணவர்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.

அதனால் கலியுக மனைவிக்கு ஏற்ற மரியாதையை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர் அப்பாவிக் கணவர்கள். அதற்கான ஒரு துவக்கம்தான் பின்வரும் செய்தி.

மாலை மலர் ஜூலை. 30-2010

மதுரை நரிமேடு தெற்கு பூங்கா தெருவை சேர்ந்தவர் செண்பகராஜன். இவரது மகன் ரகுராமன் (வயது30), என்ஜினீயர். இவர் மதுரை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தனது மனைவி சங்கீதா காயத்ரி மீது வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை கலை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் சங்கீதா காய்த்ரிக்கும் எனக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. சங்கீதா காய்த்ரி பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

சங்கீதாவும் அவரது பெற்றோர்களும் எங்கள் குடும்பத்துக்கு பல வழிகளில் தொந்தரவு செய்தனர். எங்களது சொத்துக்களை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சங்கீதாவை அவரது தந்தை தூண்டிவிட்டு தனிக்குடித்தனம் செல்லும்படி வற்புறுத்தினர்.

இதற்கு அனுமதிக்காத எனது பெற்றோரை தாக்கவும் முயற்சி செய்தனர். எங்களது பூர்வீக வீட்டை சங்கீதா காயத்ரி பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் வரதட்சணை கேட்டு மிரட்டு வதாக போலீசில் புகார் கொடுப்போம் என்றும் மிரட்டினர்.

இந்த மிரட்டலுக்கு நானும் எனது பெற்றோரும் பணிய வில்லை. இதனால் சங்கீதா பெற்றோரின் தூண்டுதலின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாங்கள் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பொய்புகார் அளித்துள்ளனர். பின்னர் போன் மூலமும், மிரட்டி வருகிறார். எனவே வரதட்சணை கேட்பதாக பொய் புகார் அளித்துள்ள சங்கீதா காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு ரகுராமன் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மாஜிஸ்தி ரேட்டு உமா மகேஸ்வரி முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வக்கீல் சந்திரசேகரன் ஆஜரானார். ரகுராமன் அவரது மனைவி சங்கீதா காயத்ரி மற்றும் குடும்பத்தினரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


இது குறித்து வக்கீல் சந்திரசேகரன் கூறியதாவது:-

பெண்களை பாதுகாக்க வேண்டும் என நோக்கத்தில் வரதட்சணை கொடுமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கணவர் குடும்பத்தை பழி வாங்கவும், மிரட்டவும் இந்த சட்டத்தை சிலர் பயன் படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண் ணுக்கு எதிராக முதல் முறையாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம். பொய் புகார் கொடுப்பவர்களுக்கு இது பாடமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


================

அப்பாவிக் கணவர்களே,

பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்களிடமிருந்து சட்டத்தின் மூலம் எப்படி புதுமை செய்வது என்று கற்றுக்கொள்ளுங்கள். இனியாவது பழமையை நினைத்துக்கொண்டிருக்கும் கணவர்கள் புதுமையாக செயல்பட ஆரம்பித்தால்தான் இந்தியாவில் உயிரோடு வாழமுடியும். இல்லையென்றால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிதைந்து போகவேண்டியதுதான். அதனால் உங்களின் கலியுக 498A-மனைவிக்குத் தகுந்த மரியாதையை சட்டத்தின் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.





No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.