புதுடில்லி : "கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இல்லத்தரசிகள் பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் அவர்களை பிச்சைக்காரர்களோடும், சிறைவாசிகளோடும் ஒப்பிட்டு கணக்கெடுப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. வருந்தத்தக்க இல்லத்தரசிகளின் மதிப்பை மறுநிர்ணயம் செய்யும் நேரம் இப்போது வந்துள்ளது. பார்லிமென்ட் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், அருண் அகர்வாலும் அவரது 39 வயது மனைவி ரெனுவும் தங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, உ.பி., மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து நேரிட்டு, ரெனு இறந்து போனார்.அருண், தன் மனைவியின் உயிரிழப்புக்கு , 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று கோரி, வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாணையமும், அலகாபாத் ஐகோர்ட்டும் அவரது மனுவை நிராகரித்து விட்டன.அவை தமது தீர்ப்பில்,"ரெனு ஓர் இல்லத்தரசி. அவருக்கு மாதந்தோறும் வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், அவரது குடும்பம் அவரைச் சார்ந்தும் இல்லை. அதனால் அவரது மதிப்பு மாதத்துக்கு 1, 250 ரூபாய்தான் பெறும்' என்று கூறிவிட்டன.மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி, ஓர் இல்லத்தரசியின் மதிப்பு, அவரது வருமானம் ஈட்டும் கணவரின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.இதனால் அருண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கை ஏற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரெனுவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:கடந்த 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை, இந்தியாவின் 36 கோடி பெண்களை, வருமானம் ஈட்டாதவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.
பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் சேர்த்ததைப் போலவே அவர்களோடு இல்லத்தரசிகளையும் சேர்த்தது, உணர்ச்சியற்ற செயல். இது தொழிலாளர்களையும், பெண்களையும் அவமானப்படுத்துவதாகும்.அதேநேரம், இதேபோல் நடக்கும் பாலியல் ரீதியிலான பாகுபாடு நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது. ஓர் இல்லத்தரசியின் வீட்டுவேலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவரது பொருளாதார மதிப்பை, மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்கள் வழங்குவதற்கான வழிவகையைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது. இதுகுறித்து பார்லிமென்ட் சிந்திக்க வேண்டும்.சட்டங்கள், இல்லத்தரசிகளின் வேலைகளான சமையல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளைக் கவனித்தல், தண்ணீர் எடுத்து வைத்தல் போன்றவற்றை ஒரு வேலையாகவே கருதவில்லை என்பதை ரெனு தொடர்பான வழக்கு நமக்கு காட்டுகிறது. இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தை ஒரு பணியிலோ அல்லது அவர்களது கல்வியிலோ செலவிட முடியும் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அவர்களது வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான், பெண்கள் மத்தியில் வறுமை அதிகரிக்கவும் சமுதாயத்தில் அவர்களின் துயரம் தொடரவும் காரணமாகின்றன.ஒரு மூன்றாம் நபரை சம்பளத்துக்கு அமர்த்தி வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை விட, இல்லத்தரசிகளின் பணி மிகவும் உயர்ந்தது. ஒரு சமையல்காரருக்கு தரும் சம்பளம் அல்லது கடையில் வாங்கும் உணவுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஒரு குடும்பத்துக்கு வேண்டிய உணவை வாங்க செலவிடப்படும் பணம் என்ற அடிப்படையில் இல்லத்தரசிகளின் சமையல் பணி மதிப்பிடப்பட வேண்டும்.இல்லத்தரசிகளிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருள் கூட, ஓர் இல்லத்தரசி அல்லது பெற்றோர் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
=============
பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று வெளியே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் இத்தனை ஆண்டுகள் பெண்களை எப்படி நடத்திவருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு இயற்றப்படும் சட்டங்களும் இப்படித்தான். பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையைத்தான் அழிந்துக்கொண்டிருக்கின்றன.
இதுவரை இந்த இழிநிலை தேசிய பெண்கள் வாரியத்திற்கோ, பெண்கள் அமைச்சகத்திற்கோ ஏன் தெரியவில்லை. பொய் வழக்குப் போடும் மருமகள்களை ஊக்குவிக்கும் விதமாக அடுக்கடுக்காக சட்டம் இயற்றும் இந்தக் கூட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் இழிநிலை ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? இந்த உண்மை பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லும் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களின் சுயநலம் காரணமாக அதை மூடிமறைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது அப்பாவிப் பெண்கள் தெரிந்துகொள்ளுங்கள் - உங்களை வைத்து எல்லோரும் வியாபாரம்தான் செய்வார்களே தவிர எந்தவிதத்திலும் உங்கள் மரியாதையைக் காப்பாற்றமாட்டார்கள்.
பெண்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுகிறேன் என்பதும், 33% ஒதுக்கீடு கேட்கிறேன் என்பதும் இதுபோன்றதொரு பிரித்தாலும் வியாபார தந்திரமே. உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிப் பெண்களையும், தவறாக சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கும் மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் பிரித்தாலும் சூழ்ச்சிதான் இன்றைய பெண்சுதந்திர முழக்கங்கள். கடைசியில் அரசியல் தந்திரங்களால் கேட்பாரற்று சீரழிக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைதான்.
1 comment:
good post....
Post a Comment