இந்தக் காதல் கதையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கவேண்டும். ஏனென்றால் திட்டம்போட்டு காதல் செய்திருப்பது ஒரு பெண் போலிஸ்.
|
பெண் போலீஸ்
| . | Thursday, 29 July, 2010 மாலைச்சுடர்
| . | சென்னை, ஜூலை 29:கள்ளக்காதல் காரணமாக மின்வாரிய ஊழியரை ஆட்களை வைத்து கொலை செய்ததாக பெண் போலீஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: |
| வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 35). இவர் துரைப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக வேலை பார்த்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக ராஜேந்திரனின் தாயார் செல்லம்மாள் வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் துணை கமிஷனர் செந்தில்குமரன் தலைமையில் அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் வெளியானது. கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜேந்திரனுக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமானது. பத்தே நாட்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜேந்திரனை விட்டு அனிதா பிரிந்து சென்று விட்டார்.
ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த சாஸ்திரக்கனி என்ற பெண் போலீசுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது. போலீசார் சாஸ்திரக்கனியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.
அந்த வாக்குமூலத்தில் சாஸ்திரக்கனி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:சாஸ்திரக்கனியின் குடும்பத்தினர் அவரது சிறு வயதிலேயே திருநெல்வேலியிலிருந்து வேளச்சேரி செக் போஸ்ட் அருகே உள்ள ஒண்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தனர்.
சாஸ்திரக்கனி கிண்டியில் படித்து வந்தபோது அதே பள்ளியில் படித்த ராஜேந்திரனுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் உயிருக்கு உயிராக பழகியதாக சொல்லப்படுகிறதுது.ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சிக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரனும் சிறு வயதிலிருந்தே சென்னையில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 1993 ஆம் ஆண்டு சாஸ்திரக்கனிக்கும், செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் விடுதியில் தங்கி +1 மற்றும் 4வது வகுப்பு படித்து வருகின்றனர்.திருமணத்தின் போது பள்ளி நண்பர் என்று செல்வராஜிடம் ராஜேந்திரனை சாஸ்திரக்கனி அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்கள் இருவருக்கும் இருந்த தொடர்பை ஆரம்பத்தில் நட்பு என்று கருதிய செல்வராஜுக்கு பின்னர் அது தகாத உறவு என்பது தெரிய வந்தது.
இதற்கிடையே 1997 ஆம் ஆண்டு சாஸ்திரக்கனிக்கு போலீஸ் வேலை கிடைத்தது. அதன் பிறகும் ராஜேந்திரனுடன் தொடர்ந்து தகாத உறவு வைத்திருந்ததை கணவர் செல்வராஜ் தட்டிக் கேட்டதை அடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ராஜேந்திரனும், சாஸ்திரக்கனியும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 2007 ஆம் ஆண்டு ராஜேந்திரனுக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. ஆனால் திருமணமான பத்தே நாளில் ராஜேந்திரனின் கள்ளத் தொடர்பு தெரிய வந்ததை அடுத்து அனிதா அவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
பெண்ணின் வாழ்க்கை பாழானதை பொறுக்க முடியாத ராஜேந்திரனின் மாமியார் பாக்கியலட்சுமி, சாஸ்திரக்கனியின் வீட்டுக்கு வந்து அவரிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. தங்களது இன்ப வாழ்க்கைக்கு பாக்கியலட்சுமி இடையூறாக இருப்பதாக கருதிய சாஸ்திரக்கனி சாலிக்கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வீரராஜன் (வயது 27) என்பவரிடம் ராஜேந்திரனின் மாமியாரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாஸ்திரக்கனிக்கும், வீரராஜனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வீரராஜன் ஐபிஎஸ் தேர்வு எழுதியிருப்பதாகவும் அதில் தேர்வாகி போலீஸ் அதிகாரியாகி விடுவேன் என்றும் கூறியதை அடுத்து சாஸ்திரக்கனி அவரிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ரகசிய உறவு ராஜேந்திரனுக்கு தெரிய வந்ததும் அவர் சாஸ்திரக்கனியிடம் உன்னால்தானே என்னுடைய வாழ்க்கை வீணாகி விட்டது. இப்போது நீ வேறொருவருடன் குலாவுவதா என்று கேட்டதாக கூறப்படுகிறது.இதை சாஸ்திரக்கனி வீரராஜனிடம் தெரிவிக்க அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொல்ல திட்டமிட்டனர். கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி ராஜேந்திரனை வீரராஜன் சந்தித்தார்.
ராஜேந்திரனின் மாமியாரை கொல்ல முடிவாகி விட்டது என்றும் அந்த சமயத்தில் ராஜேந்திரன் சென்னையில் இருந்தால் போலீசாருக்கு வீணான சந்தேகம் ஏற்படும் என்று கூறி அவரை திருத்தணிக்கு வீரராஜன் ஒரு காரில் அழைத்துச் சென்றார்.
வீரராஜனுடன் தஞ்சாவூரை சேர்ந்த பசுபதி (வயது 24), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 26), பள்ளிக்கரணையை சேர்ந்த முருகன் (வயது 24) ஆகியோர் அந்த காரில் சென்றனர். சதீஷ் (வயது 25) என்ற டிரைவர் காரை ஓட்டிச் சென்றார்.
கனகம்மா சத்திரம் அருகே சென்றபோது ராஜேந்திரனுக்கு மது வாங்கிக் கொடுத்து அவரை அடித்து வீரராஜனும் அவரது கூட்டாளிகளும் கொன்றனர். பின்னர் அவரது உடலை ஒரு இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டனர்.
அதற்கு அடுத்த நாள் பாதி எரிந்த நிலையில் ராஜேந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி திருத்தணி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்து விட்டனர். ராஜேந்திரனின் உடலில் எரியாமல் இருந்த துணி, ரத்த மாதிரிகள் சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த திடுக்கிடும் தகவல்கள் சாஸ்திரக்கனியின் வாக்குமூலத்தின் மூலம் அறிந்து கொண்ட போலீசார் சாஸ்திரக்கனி, வீரராஜன், முருகன், வேணுகோபால் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய பசுபதி, சதீஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கொலையில் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், கொலை நடந்ததை நடித்து காட்டுவதற்காக கைது செய்யப்பட்டவர்களை கனகம்மாசத்திரத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளனர். மேலும் புதைக்கப்பட்ட ராஜேந்திரனின் பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். |
|
No comments:
Post a Comment