பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று பெண் வக்கீலை சக வழக்கறிஞர் ஒருவரே கொடூரமாக குத்திக் கொலை செய்தார். தானும் தற்கொலை க்கு முயன்றபோது அவரை காப்பாற்றிய போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பெங்களூர் விதான சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ளது. அங்கு இன்று காலை பெண் வக்கீல் நவீனா என்பவரை ஒருவர் குத்திக்கொலை செய்தார். பின்னர் தனது தொண்டையைக் கிழித்து தற்கொலை செய்து கொள்ளவும் அவர் முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரும் ஒரு வக்கீல்தான். பெயர் ராஜப்பா. தொழில் போட்டியில் இந்த செயலை செய்ததாக தெரிகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வழக்கறிஞர்களிடையே தொழில் போட்டியை உருவாக்கினால் நாடு வளம் பெறும் போலிருக்கிறது! பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளும் குறையும். எப்படி என்று தெரிந்துகொள்ள பின்வரும் கட்டுரையையும் படியுங்கள்.
"கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ... லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு... வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரணுமா? அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்... இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை...' எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.
சொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்... இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்... இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், "பாதிக்கப்பட்டோர் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, "படித்துப்பார்...' என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்...
பஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.
சிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், "ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது!' என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். "பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்!' என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி?
"ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்...' என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...
"இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்!' என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது!
வழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
ஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம்! ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.
"ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!' என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...
உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன.
இந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர். வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...
வெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ - இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே! வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.
இந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே!
வழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.
சென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா?
வழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா?
பொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சிந்திப்பீர்!
இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.
— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே!
No comments:
Post a Comment