இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, January 06, 2011

கடவுளை தண்டிக்க ஒரு கடவுள் வேண்டும்

குடும்பப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்கள் மகளிர் காவல் நிலையங்களை நாடும்போது அவர்களை அன்பாக நடத்தி அவர்களின் பிரச்சனைகளை அன்பான அகிம்சை வழியில் தீர்த்துவைத்து தங்களை நாடி வந்தவர்களின் குடும்பம் சந்தோஷமாக திரும்பிச் செல்வதைக் கண்டு உள்ளம் பூரித்திடும் பூலோக சொர்க்கம் அல்லவா மகளிர் காவல் நிலையங்கள்.

குடும்பப் பிரச்சனை காரணமாக அவசரப்பட்டு பொய் வரதட்சணைப் புகார் கொடுக்கும் பெண்களை அன்பாக நடத்தி அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி தவறை உணரவைத்து குடும்பங்கள் சிதையாமல் போற்றிப் பாதுகாக்கும் நடமாடும் தெய்வங்கள் அல்லவா பெண் காவலர்கள்.

மருமகள் அவசரப்பட்டு தவறாக ஒரு பொய் வரதட்சணை புகாரினை கணவனின் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் பதிவு செய்யவந்தால் பொய் வரதட்சணை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்து மிகவும் கனிவாக விசாரணை செய்து நேர்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி பல குடும்பங்கள் சிதையாமல் பாதுகாக்கும் கண்ணியமிக்கவர்கள் அல்லவா பெண் காவலர்கள்.

இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளில் பல வயதான பெண்களும், உடல் நலம் குன்றிய வயதானவர்களும், இளம் பெண்களும், குழந்தைகளும் சிக்கவைக்கப்படும்போது வழக்கின் உண்மை தண்மையை ஆராய்து இதுபோன்ற அப்பாவிகளின் கண்ணியம் சிதையாமல் அவர்களை பாதுகாக்கும் குலதெய்வங்களாயிற்றே பெண் காவலர்கள்.

கடவுள் ஒரே ஒரு நாள் மகளிர் காவல்நிலைய வாசலில் நின்றுகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் ஏதோ ஒரு காரணத்தால் சிதையும் தருவாயில் இருக்கும் பல குடும்பங்கள் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்த பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு எப்படி சந்தோஷமாக கைகோர்த்துக்கொண்டு திரும்பிச்செல்கிறார்கள் என்றும் அதற்காக இந்தப் பெண் காவலர்கள் எத்தனை பாடுபட்டு இதுபோன்ற குடும்பப் பிரச்சனைகளில் சிக்கும் அப்பாவிக் குழந்தைகளின் நலன் கருதி இந்தப் பிரச்சனைகளை ஒரு மலரைப் போல மென்மையாக எப்படிக் கையாளுகிறார்கள் என்றும் உணரமுடியும்.

இதுபோன்ற பண்பான காவல்தெய்வங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பிரச்சனைகளை கொடுக்கும் கடவுளுக்கு கொஞ்சமும் இரக்கமே கிடையாதா? இந்தக் கடவுளை தண்டிக்க ஒரு கடவுள் வரவேண்டும்.


தினமலர் ஜனவரி 07, 2010

மதுரை : மதுரையில் பெண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இருவரின் தற்கொலை போலீஸ் துறையை மட்டுமல்லாது, அனைத்து துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க, பெண் போலீசாருக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து பாதிக்கப்பட்டோரின் மனநலத்தை காப்பது போலீஸ் துறை முக்கிய கடமை.

மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 - 40 வயது பெண்கள் தீக்குளித்தல், தூக்கு, விஷம் சாப்பிட்டு தற்கொலை முடிவை அதிகமாக தேடியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 354 பேர். 2009ம் ஆண்டு 399 பேர். இதில் செல்லூரில் மட்டும் 68 பேர். 2010ல் செல்லூரில் 46 பெண்கள் தற்கொலை முடிவை தேடியுள்ளனர். விவாகரத்து, கணவருடன் தகராறு, பொருளாதார பின்னடைவு, குடும்ப பிரச்னைகளால் தான் பெரும்பாலும் பெண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். இப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாவர்கள் படிக்காதவர்கவே அதிகம் இருந்தனர். ஆனால் சமீபத்தில் படித்த, பட்டம் பெற்ற, அரசு வேலைகளில் இருக்கும் பெண்களும் இந்த விபரீத முடிவை தேடுவது அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.மேலூர் எஸ்.ஐ., எஸ்தர் ராணி(33) மதுரை புதூர் மண்மலை மேட்டிலுள்ள வீட்டில் டிச. 23ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். நாகமலைப்புதுக்கோட்டை எஸ்.ஐ., ரங்கநாயகி, மதுரை வைகை வடகரையில் அப்பார்ட்மென்ட் வீட்டில் ஜன., 5ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த இரு சம்பவங்களும் மதுரை மாவட்ட போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண் போலீசாருக்கு சமமாக பெண் போலீசாருக்கும் பணிகள் வழங்கப்படுகின்றன. ஆண்களே தனியாக செல்ல தயங்கும் பாதுகாப்பற்ற இடங்களிலும் பெண் போலீசார் இரவில் தனியாக செல்லும் சூழல், இடைவெளியின்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுதல், ஓய்வின்மை, அதிகாரிகளின் நெருக்கடி இதனால் ஏற்படும் மனச்சோர்வு, மனஅழுத்தம், தாழ்வுமனப்பான்மை போன்ற பல காரணங்களும் குடும்ப பிரச்னைகளும் தான் பெண் போலீசாருக்கு தற்கொலை முடிவை தேடும் நிலையை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், மனநல டாக்டரிடம் கருத்து கேட்டோம்:

சமுதாயத்திலும் பிரச்னை: தென் மண்டல ஐ.ஜி.,கிருஷ்ணமூர்த்தி: பெண்களிடம் விழிப்புணர்வு தேவை. மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றினால் அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். சிலர் பல ஆண்டுகள் ஆண்களுடன் தொடர்பு வைத்துவிட்டு, பின் திருமணம் என வரும் போது யாரையாவது ஒருவரை தேர்வு செய்கின்றனர். அவர்கள் தங்களுடன் ஒத்துப்போகவில்லை என தகராறுகளில் ஈடுபடுவதும், பிரச்னைகளில் நேரத்தை செலவு செய்வதும், முடிவில் விவாகரத்து என செல்கிறது. சமுதாயம் குறித்த விழிப்புணர்வை அனைத்து நிலையிலும் ஏற்படுத்த வேண்டும். பெண் போலீசாருக்கு இது போன்ற பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் ஆரம்பிப்பது புதிது அல்ல. தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு போலீஸ் துறையில் பணி நெருக்கடி இல்லை. தென் மண்டலத்தில் அனைத்து போலீசாருக்கும் விரைவில் சிறந்த மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு பயிற்சி நடத்தப்படும்.

பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்
: மனோகர், மதுரை, எஸ்.பி., :பெண் போலீசாருக்கு ஏற்படும் பிரச்னை குறித்து அவர்கள் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் நேரில் தெரிவிக்க வாரந்தோறும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட, குடும்ப, பணி தொடர்பான எந்த பிரச்னைகளானாலும் தெரிவிக்கலாம். தைரியமாக தங்கள் புகார்களை தெரிவித்து பலர் பிரச்னைகளில் இருந்து விடுபட்டுள்ளனர். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பெண் போலீசாரின் வீடுகள் அருகே ஸ்டேஷன்கள், பாதுகாப்பு பணியில் கூட பெண் போலீசார் தனிமைப்பட்டு விடக்கூடாது என ஒரு குழுவாகவே நியமிக்கப்படுகின்றனர். மனதில் வைக்காமல் பிரச்னைகளை தைரியமாக எடுத்துக்கூறி நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை முடிவு எல்லாம் கோழைத்தனமானது.

வாரத்தோறும் பயிற்சி
: போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் (மதுரை): மதுரை நகர் பகுதியில் பெண் போலீசார் யாரும் இது போன்ற அபத்தமான முடிவை எடுக்கவில்லை. இந்த சம்பவங்கள் போலீஸ் துறையின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மதுரை நகர் போலீசாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அணிவகுப்பின் போது, இனி மனநலம் குறித்த சிறப்பு பயிற்சி கூடுதலாக ஒரு மணிநேரம் நடத்தப்படும். சிறந்த நிபுணர்களை கொண்டு தொடர் பயிற்சி மற்றும் யோகா போன்ற வகுப்புகள் மூலம் இது போன்ற அனைத்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்கப்படும்.

மன அழுத்தமே காரணம்
: மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் ராமானுஜம்: போலீஸ் துறை பெண்களுக்கு புதிதான விஷயம். பணி செய்யும் எல்லாப் பெண்களுக்குமே வீட்டுவேலை, அலுவலக வேலை பளுவின் காரணமாக மனஅழுத்தம் ஏற்படும். குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாவிட்டால் கூட, மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவர். போலீஸ் துறையில், கூடுதல் பணிச்சுமை இருக்கும். இதை தாக்குபிடிக்க முடியாமல் இருக்கலாம். அல்லது உயரதிகாரியின் கட்டளைக்கு பணிந்து போகமுடியாத நிலையில் இருக்கலாம். மன அழுத்தம் அதிகரித்து, தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்கின்றனர். மனச்சோர்வாக, எதையும் விரக்தியாக பேசுவதை வைத்து, அவர்களை இனம் காண முடியும். உரிய நேரத்தில் "கவுன்சிலிங்' செய்தால், தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கமுடியும். மதுரை அரசு மருத்துவமனையில், "தற்கொலை தடுப்பு கிளினிக்' செயல்படுகிறது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருப்பவர்களை, சரியான விதத்தில் "கவுன்சிலிங்' கொடுக்கிறோம் என்றார்.

காத்திருக்கும் "புதுயுகம்'
: மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று மாதங்களுக்கு முன் "புதுயுகம்' அமைப்பு துவக்கப்பட்டது. செல்லூர் மகப்பேறு மருத்துவமனையில் இது செயல்படுகிறது. தினமும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை இங்கு தற்கொலை எண்ணத்துடன் அவதிப்படும் நபர்களுக்குகவுன்சிலிங் வழங்கப்படுகிறது. செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் மூலம் பல பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புதுயுகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சிவரஞ்சனி, "" தற்கொலை முடிவை தேர்வு செய்த பலரை கவுன்சிலிங் மூலம் காப்பாற்றியுள்ளோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்தால், அந்த எண்ணம் மற்றவர்களுக்கும் வந்துவிடும். அதனால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்த குடும்பத்தினரின் வீடுகளுக்கும் சென்று கவுன்சிலிங் கொடுக்கிறோம்.24 மணி நேரமும் இலவச அழைப்பு எண் மூலம் 0452- 258 0011 ல் தொடர்பு கொள்ளலாம். தொழில் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை முடிவை யாராவது எடுத்தால், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் கிடைக்க வழிகாட்டியாகவும் இம்மையம் செயல்படும்'', என்றார்.



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.