மூவரை திருமணம் செய்து ஏமாற்றிய "கல்யாண ராணி'’
ஜனவரி 12,2011 தினமலர்
செங்கன்னூர் : மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை மோசடி செய்த, "கல்யாண ராணி'யை போலீசார் கைது செய்தனர்.
அவரை காணவில்லை என, கணவர் கொடுத்த வழக்கில், கோர்ட் விடுவித்தது என்றாலும், ஒரு மணி நேரத்திற்கு பின், பணம், நகைகளை மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதானார்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சடையமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (28). இவர் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிரமோத் (48) என்பவருடன் வாழ்ந்து வந்தார். தன்னுடன் வாழ்ந்து வந்த ஷாலினியை காணவில்லை என்றும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் கோரி கேரள ஐகோர்ட்டில் அவர், "ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு தாக்கல் செய்தார்.ஐகோர்ட் உத்தரவின்படி செங்கன்னூர் போலீசார், ஷாலினியை தேடி வந்தனர். பத்திரிகைகளில் ஷாலினியின் படத்தை பார்த்த பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனது பகுதியில் அப்பெண் இருப்பதாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்களிடம், அப்பெண் இருக்கும் இடத்தை காண்பித்து அப்பெண்ணை பிடிக்க உதவினார்.அப்பெண்ணுடன் இருந்த அவரது மகன் கண்ணன் (5) ஆகியோரை, போலீசார் செங்கன்னூர் கொண்டு சென்று, விசாரணை நடத்தினர்.விசாரணையில் பல, "திடுக்' தகவல்கள் தெரியவந்தன.
வழக்கு குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை பார்த்த ஷாலினி, தன் குழந்தையுடன் தப்பியோட முயன்றபோது தான் போலீசாரின் பிடியில் சிக்கினார். இவர், 2010ம் ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த மறுமணத்திற்கு தயார் என்ற விளம்பரத்தை பார்த்து, பிரமோத் (48) என்பவரை தொடர்பு கொண்டார்.தான், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் வங்கியில் உதவி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின் இருவரும், எர்ணாகுளத்தில் வசித்து வந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து நகைகள் மாயமான புகார் காரணமாக அங்கிருந்து இருவரும் செங்கன்னூரில் வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்தனர்.அங்கு பல மோசடி வழக்குகள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, டிசம்பர் மாதம் 7ம் தேதி குழந்தையுடன் ஷாலினி மாயமாகி விட்டார். இதுகுறித்து தான் பிரமோத் வழக்கு தொடர்ந்தார். போலீசாரிடம் சிக்கிய ஷாலினி, மேலும் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
அவரை செங்கன்னூர் போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காணவில்லை என்று பிரமோத் கொடுத்த மனு மீது தான் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தியதால், கோர்ட் உடனடியாக விடுவித்தது. கோர்ட்டில் இருந்து அவர் விடுதலை பெற்றதும், வக்கீல் வீட்டுக்குச் சென்றார்.இதைஅறிந்த பிரமோத், தனது மூன்று லட்ச ரூபாய், 25 சவரன் நகைகளை ஷாலினி எடுத்துச் சென்று விட்டார் என மீண்டும் ஒரு புகாரை செங்கன்னூர் போலீசில் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார், ஷாலினி சென்ற வக்கீல் வீட்டுக்குச் சென்று காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.கைதாகி உள்ள பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment