இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, November 18, 2009

வெறும் சடங்குகளாக மாறி வரும் திருமணங்கள்

Dinamalar News- நவம்பர் 19,2009

தற்போது, திருமணங்கள் வெறும் சடங்குகளாக மாறி வருகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் மாறி வருகிறது.
குடும்ப வாழ்க்கையில், எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகா விட்டால், அங்கு பிரச்னைகளும், சிக்கல்களுமே உண்டாகின்றன. குடும்பத்தில் சிறு பிரச்னை என்றாலும், போலீஸ், கோர்ட் என்று, நிவாரணம் தேடி வெளி உலகுக்கு வருவது, அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாகவே உள்ளதால், ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.சமூகத்தில் ஆண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
குடும்ப வன்முறைச் சட்டத்தினால், 2003 முதல் 2006 வரை ஒன்றரை லட்சம் ஆண்கள், நாடு முழுவதும் தற்கொலை செய்துள்ளனர்.
பெண்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம், தற்போது ஆண்களின் உயிருக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக குமுறுகின்றனர், ஆண்கள் நல அமைப்புகள். ஆண்டு தோறும், இப்புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

பெண் தரப்பில் வரதட்சணை புகார் கொடுத்தவுடன், அக்குடும்பத்தில் உள்ளவர்களை, விசாரணை ஏதுமின்றி அனைவரும் கைதாகும் நிலை உள்ளது. ஆனால், ஆண்கள் தங்களின் நியாயமான புகார்களை கூட பதிவு செய்ய திண்டாட வேண்டியுள்ளது.
சின்ன, சின்ன மோதல்கள் கூட, கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் பெருகி வருகிறது. இப்பிரச்னைகளுக்கு மூல காரணமே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான். வழக்குகளாலும், பல்வேறு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கென அமைப்புகளை உருவாக்கி உரிமைக்கு குரல் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக தற்போது, "ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்' அமைக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமாகியுள்ளது.


ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னையில் உள்ள, "ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின்' மாநிலத் தலைவர் அருள் துமிலன் கூறியதாவது:

பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சமூக பாதுகாப்பிற்காக, இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் அடிமைத்தனம், பெண்களின் முன்னேற்றம் என்று, பெண்களுக்கே சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஆண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
சமூகத்தில் ஆண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை அவர்கள் வெளிப்படையாக சொல்வது கிடையாது. சில ஆண்கள் முன்வந்து கூறினாலும், அவர்களுக்கு உரிய நிவாரணம், சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு என்று எதுவும் கிடைப்பது இல்லை.
எனவே, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு, இச்சங்கத்தின் மூலம், பாதுகாப்பும், சட்ட உதவியும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.
தற்போது குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ஆண்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளன.இந்த சட்டங்களை, பெண்கள், ஆண்களைத் தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால், பராம்பரியமான குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அருள் துமிலன் கூறினார்.
===============




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.