இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, February 12, 2011

விவாகரத்துக்களை தடுக்க எளிய வழி

இன்றைய தினமலர் செய்தித்தாளில் நாட்டில் விவாகரத்துக்கள் அதிகரித்துவிட்டன என்று வருத்தப்பட்டு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

இந்த விவாகரத்துக்கள் அதிகரிப்பதற்கு முற்றிலும் ஆண்கள்தான் காரணம். மனைவியை “அட்ஜஸ்ட்” செய்து வாழத்தெரியாத ஜென்மங்கள்! இந்த வீடியோவைப் பார்த்தாவது மனைவியிடம் எப்படி அன்பாக நடந்து மனைவியின் மனம் கோணாமல் நடக்கவேண்டும் என்று கற்றுக்கொள்ளட்டும்.




மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள்

தினமலர் பிப்ரவரி 11,2011

குடும்ப உறவை வெட்டிக் கொள்வதில் ஆண், பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் கோவை குடும்ப கோர்ட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1,759 விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. "அதிகரித்து வரும் வழக்குகளால் தாமதத்தை தவிர்க்க கூடுதலாக ஒரு கோர்ட் தேவை' என்கின்றனர், கோவை வக்கீல்கள்.

கலாசார சீரழிவு, யோசனை கூற உறவினர் இல்லாமை, தனிக்குடித்தன கோரிக்கை, பொறாமை, கள்ளத் தொடர்பு, தாம்பத்ய உறவில் ஏமாற்றம், ஆடம்பரம் இப்பிரச்னைகள் குடும்ப ஒற்றுமையை சீர்குலைக்கிறது. ஒரு சில குடும்பங்களில் மட்டுமே வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துகிறார் என்ற புகார் எழுகிறது. "திருமணமாகி, ஒரு ஆண்டுக்கு பின்னரே விவாகரத்து' என சட்டத்தில் இடமுள்ளதால் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்த தம்பதிகள் ஓராண்டு காத்திருந்து கோர்ட்டுக்கு வருகின்றனர். விசாரணை துவங்கும் முன் விவாகரத்து கேட்கும் கணவன், மனைவிக்கு தனித்தனியாகவும், சேர்ந்தும் கவுன்சிலிங் தரப்படுகிறது. ஆனாலும், "வெட்டிக் கொள்வதை' விட்டுக் கொடுக்காமல் கோர்ட்டுக்கு வருவோர் கவுன்சிலிங் நடக்கும் போதும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியான குற்றசாட்டையே சுமத்திக் கொள்கின்றனர். வேறு வழியின்றி கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே சேர்ந்து வந்து "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் சென்னை (இரண்டு கோர்ட்கள்), மதுரை, கோவை மற்றும் சேலத்தில் உள்ள குடும்ப கோர்ட்களில் பதிவாகும் வழக்குகள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளன. இதற்கு, பெண்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும் தான் காரணம் என்கின் றனர், வக்கீல்கள். தற்போது, குடும்ப கோர்ட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் வழக்கு தொடர்கின்றனர். குறிப்பாக ஐ.டி.,துறையினர் தான் அதிகம். பொதுவாக பெண்கள் சொல்லும் காரணம்," தனிக்குடித்தனம் நடத்த விரும்பாமல், பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வாழவே கணவர்கள் எதிர்பார்க்கின்றனர். சிலர் கட்டாயப்படுத்துகின்றனர்' என்கின்றனர். கோவை கோர்ட்டில் நான்கு ஆண்டுகளில் படிப்படியாக விவாகரத்து வழக்குகள் அதிகரித் துள்ளன. கடந்த 2009ல் 1,253 விவாகரத்து வழக்குகளும், 239 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின. கடந்த ஆண்டு(2010) 1.429 விவாகரத்து வழக்குகளும், 330 ஜீவனாம்சம் கேட்பு வழக்குகள் என 1,759 வழக்கு பதிவாகியுள்ளன. வழக்குகள் அதிகரிப்பால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பல வழக்குகள் முடிக்கப்பட்டு விவாகரத்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் 2010, டிச.,31ல் 1,339 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்தன.

தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாதமும் 120 வழக்குகளுக்கும் கூடுதலாக பதிவாகின்றன. "அடுத்து வரும் ஆண்டுகளில் இது பல மடங்கு உயரும்' என வக்கீல்கள் தெரிவித்தனர். தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள், பத்திரிக்கைகளில் வெளியாகும் சில செய்திகள் விவாகரத்து பெறலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகின்றன.எனவே "மணந்தோம், மறந்து விடுவோம்' என முடிவு எடுக்காமல் பொறுமையும், சிறந்த அணுகுமுறையையும் கடை பிடித்தால் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது.

===========


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.