இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, December 25, 2010

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழகம்?

தினமலர் 12/26/2010

தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில், அவர்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழக காவல் துறை, பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. தமிழக குற்ற ஆவண காப்பக பதிவின்படி, பெண்களுக்கெதிரான குற்றங்கள், கடந்தாண்டை விட 23 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, கணவன், உறவினர்களால் கொடுமைப்படுத்தப்படுதல் போன்ற குற்றங்கள் பெண்களுக்கெதிராக அதிகளவில் பதிவாகும். அந்த வகையில், 2008ல் 6,262 வழக்குகள் பதிவாயின. கடந்தாண்டு, 5,126ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டில் நவம்பர் வரை 5,508 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கற்பழிப்பு: கடந்தாண்டில் குறைந்தாலும், இந்தாண்டு மீண்டும் அதிகரித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டில், 626 கற்பழிப்பு புகார்கள் பதிவாகியுள்ளன. சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் சென்னையில் தான் அதிகளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. ஊட்டி மற்றும் கோவையில், தலா ஒரு பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டது என, கற்பழிப்பு பட்டியல் நீள்கிறது. கற்பழிப்பு சதவீதம், கடந்தாண்டை விட இந்தாண்டு 12 சதவீதம் அதிகம்.

கடத்தல்: இந்தாண்டு 1,278 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில், சேலம், விழுப்புரம், நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் அதிகளவு புகார்கள் வந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும், கடந்தாண்டு 156 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 1,323 புகார்கள் பதிவாகியுள்ளன. சேலத்தில் அதிகபட்சமாக 130 பெண்களும், தேனியில் 71, நெல்லையில் 56, சென்னை மாநகரில் 25 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 25 சதவீதம் அதிகம். பெண்களும் ஆண்களை விட அதிகளவில் சம்பாதிக்க துவங்கியது, ஐ.டி., துறையில் அதிகளவில் காதல் திருமணங்கள் உள்ளிட்ட காரணங்களால், வரதட்சணை கொடுமையால் இறப்பு இந்தாண்டு சற்று குறைந்துள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்தாண்டு, இதுவரை இறந்த பெண்கள் எண்ணிக்கை 155. கடந்தாண்டு இது 179ஆக இருந்தது. அடுத்தது, கணவன் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் தொடர்பாக 1,409 புகார்கள் இந்தாண்டு பதிவாகியுள்ளன. சென்னை மாநகரில் அதிகபட்சமாக 117 மற்றும் திண்டுக்கலில் 94, தேனி மாவட்டத்தில் 115 புகார்கள் வந்துள்ளன. இது கடந்தாண்டை விட 5 சதவீதம் அதிகம்.

வரதட்சணை: வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், இந்தாண்டு 183 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக, இந்தாண்டு 534 புகார்கள் பதிவாகியுள்ளன. இது கடந்தாண்டை விட 31 சதவீதம் குறைவு. இதில், அதிகபட்சமாக விருதுநகரில் 97, கன்னியாகுமரி 96, திருச்சியில் 87, சென்னை புறநகரில் 78 புகார்கள் பதிவாகியுள்ளன. இன்னும் டிசம்பர் மீதமிருக்கையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர் காக்கிச்சட்டை அதிகாரிகள்.

ஆண்களை பாடாய் படுத்தும் சட்டம்: பெண்களின் நடவடிக்கைகளே, அவர்களுக்கெதிரான குற்றங்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. மேற்கத்திய பாணியில், உடல் பாகங்களை வெளிகாட்டும் நவநாகரிக உடைகள், மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல், "சாட்டிங்', "டேட்டிங்' போன்றவை எதிர் தரப்பினரை குற்றம் புரிவதற்கு தூண்டுகின்றன. பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்ததும், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. சட்டம் கொண்டுவரப்பட்ட புதிதில், பெண்களுக்கு நன்மை பயத்த இந்த சட்டம், காலம் செல்லச் செல்ல, ஆண்களுக்கெதிராக பயன்படுத்தப்படும் சட்டமாக மாறிவிட்டது. தற்போது அந்த சட்டம், பிடிக்காத ஆண்கள் மற்றும் கணவரை பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தப்பட்டு வருகிறதே தவிர, உண்மை குற்றவாளியை தண்டிப்பதில் பயன்படுத்தப்படுவதில்லை. சாதாரண வீட்டுச் சண்டை, அலுவலக பிரச்னைகளை கூட பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவந்து, ஆண்களை படாத பாடு படுத்தி விடுகின்றனர்.

========

மேலுள்ள செய்தியில் செய்திக்கு தலைப்பு எப்படி கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். பிறகு கடைசி பகுதியில் அவர்களே உண்மை நிலையை எழுதியிருக்கிறார்கள். பதிவு செய்யப்படும் வழக்கு எண்ணிக்கை என்பது வேறு. வழக்கின் கடைசியில் எத்தனை உண்மையானவை என்பது வேறு.

காசு கொடுத்தால் ஜனாதிபதிக்கே பிடிவாரண்ட் போடும் நாட்டில்இதுபோன்ற “பதிவானவை” என்ற அடிப்படையில் புள்ளி விபரங்களைப் பற்றி எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும். இப்படித்தான் விஷயங்கள் வேறுவிதமான கோணத்தில் ஊதி பெரிதாக்கப்பட்டு ஒருதலைபட்சமான சட்டங்கள் சுயநலத்திற்காக இயற்றப்படுகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்தான். கடைசியில் எல்லா வீடுகளும் ஒரு நாள் எரியத்தான் போகிறது. அன்றுதான் உண்மை புரியும். இப்போது அந்தத் தீ எப்படி எரிந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் செய்தியின் கடைசியில் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார்கள்.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.