இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, April 16, 2012

பொய் வரதட்சணை வழக்குப்போடுவேன் என்று மிரட்டிய மணப்பெண்!


வேலூர்: தாலி கட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டையை சேர்ந்தவர், அப்பாதுரை மகன் மாதவன். மளிகைக் கடை வைத்துள்ளார். இவருக்கும், சேலத்தை சேர்ந்த கோசல்ராம் மகள் ஜெயசுதா என்பவருக்கும், வாலாஜாபேட்டையில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

ஏற்பாடு தடபுடல் : நேற்று முன்தினம் இரவு, திருமண வரவேற்பு, தடபுடலாக நடந்தது. பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு போன்ற பல்வேறு சம்பிரதாயங்கள் நடந்தன. நேற்று காலை, 7.30 மணிக்கு, திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. மாப்பிள்ளை, சர்வ அலங்காரத்துடன், மணமேடையில் அமர்ந்திருந்தார். ஆனால், தாலி கட்ட வேண்டிய நேரத்தில், மணப்பெண் வரவில்லை. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, திருமண மண்டபத்தில் இருந்த ஜெயசுதா, யாருக்கும் தெரியாமல், அங்கிருந்து வெளியேறி, வாலாஜாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.

போலீஸ் ஸ்டேஷனில் புகார் : "மாப்பிள்ளை மாதவனை எனக்கு பிடிக்காததால், திருமணத்தில் இஷ்டமில்லை' என புகார் செய்தார். போலீசார், திருமண மண்டபத்துக்கு சென்று, இரு வீட்டாரிடமும் ஜெயசுதா கூறிய தகவலை தெரிவித்தனர். இதை, இரு வீட்டாரும் ஒப்புக் கொள்ளவில்லை. மாப்பிள்ளை, பெண் வீட்டார், போலீஸ் ஸ்டேஷன் சென்று, மணப்பெண் ஜெயசுதாவிடம், பேச்சு வார்த்தை நடத்தினர். ஜெயசுதாவின் வீட்டார், மாதவனை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்டனர்; ஜெயசுதா மறுத்து விட்டார். போலீசாரும், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படியும் ஜெயசுதா, சம்மதிக்கவில்லை. இதனால், திருமணம் நிறுத்தப்பட்டதாக, போலீசார் அறிவித்தனர்.

"நான் மேஜர்' : இரு வீட்டாரும், போலீஸ் ஸ்டேஷனில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயசுதா, ""நான் மேஜர். எனக்கு மாதவனை பிடிக்காததால், திருமணத்தை நிறுத்தினேன். அனைவரும் கலைந்து செல்லாவிட்டால், எல்லார் மீதும் புகார் செய்வேன்'' என கூறினார்.

"வரதட்சணை புகார் செய்வேன்' : ""திருமணச் செலவு, 5 லட்ச ரூபாய் ஆகி விட்டது. அதற்கான நஷ்டஈடு தர வேண்டும்'' என, மணமகன் வீட்டார் கேட்டனர். அதற்கு ஜெயசுதா, ""வரதட்சணை வாங்குவதும் தவறு; கொடுப்பதும் தவறு. நீங்கள் பணத்தை கேட்டால். வரதட்சணை கேட்டதாக புகார் செய்வேன்'' என கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும். அங்கிருந்து வெளியேறினர். தாலி கட்டும் நேரத்தில், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம். உறவினர்கள் மத்தியிலும், அப்பகுதியிலும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
==========

இதுபோல திருமணத்தின்போது பெண்ணை பிடிக்கவில்லை என்று மணமகன் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அப்போதும் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். வரதட்சணை சட்டங்கள் வரதட்சணையை ஒழிப்பதாற்காக பயன்படுத்தப்படுவதில்லை என்று இப்போது வெளிப்படையாகத் தெரிகிறதல்லவா?



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.