இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, July 26, 2009

இந்தியக் குடும்ப அமைப்பின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி

இந்தியக் குடும்ப அமைப்பின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி

போலிசுக்கும், வக்கீலுக்கும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க எந்த வகையான பயிற்சியும் கொடுக்கப்படுவதில்லை. அப்படியிருக்க, குடும்பப் பிரச்சனைகளை அவர்கள் எப்படி தீர்க்க முடியும் ? ஊரில் நடக்கும் திருமணங்களை போலிசும், வக்கீலுமா நடத்தி வைக்கிறhர்கள்?

ஒவ்வொரு குடிமகனும் அல்லது குடிமகளும் கட்டாயமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த வித சட்டமும் இல்லை. ஆனால், திருமணங்களை எளிதில் சிதைக்க நாட்டில் பல விதமான சட்டங்களும் அவற்றை எந்த முறையிலாவது செயல்படுத்தித் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்ள பல்துறை அதிகாரிகள் பலரும் உள்ளனர்.

தம்பதியரின் படுக்கை அறையில் புகுந்து தங்களது வயிற்றை நிரப்பும் கயவர்கள் பலர் நாட்டில் இருக்கின்ற வரை இந்தியக் குடும்ப கலாசார அழிவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.
-------------------------------------------------------------------------------------------------

தீவிரமாகும் விவாகரத்து நோய்
Thanks: Dinamalar. July 27, 2009

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை.

குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர். சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!: சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான காலசூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது. இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.