சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, April 24, 2011

கோயிலுக்குச் சென்றால் கொடுமை!

“கொடுமை கொடுமை என்று கோயிலுக்குச் சென்றால் அங்கே இரண்டு கொடுமைகள் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக்கொண்டிருந்ததாம்” என்று நாட்டுப் புறங்களில் தங்களது குறைகளைத் தீர்க்க வழியில்லாமல் மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இதுதான் இன்றைய இந்தியத்திருமண வாழ்க்கையில் சிக்கியிருப்பவர்களின் நிலை. இக்காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் “புதிய பெண்ணுரிமை” கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட பல மனைவியர் தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எல்லா குடும்பப் பிரச்சனைகளுக்கும் வரதட்சணைக் கொடுமை என்ற ஒரே சாயம் பூசி கணவனுக்கெதிராக வரதட்சணைப் புகாரை எழுதி எடுத்துக்கொண்டு மகளிர் காவல்நிலையத்திற்குச் சென்று புகாரை நீட்டிவிடுகிறார்கள்.

இதுபோன்ற மனைவியர் மகளிர் காவல் நிலையங்களை மனைவியரின் சகலவிதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் கற்பக மரத்தடி தேவலோகம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கொடுமை கொடுமை என்று கோயிலுக்குச் சென்றால் அங்கே இரண்டு கொடுமைகள் ஜிங்கு ஜிங்கு என்று ஆடிக்கொண்டிருந்ததாம்” என்ற பழமொழி மகளிர் காவல் நிலையங்களுக்குத்தான் நன்றாக பொருந்தியிருக்கிறது என்பது இந்த மனைவியருக்குத் தெரிவதில்லை.

ஏனென்றால் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண்களின் நிலைமையே தலைகீழாக இருக்கிறது. அங்கிருக்கும் பெண் போலிஸிற்கே பாலியல் கொடுமை, குடும்பப் பிரச்சனை, வழக்குகளை கையாள முடியாத மன அழுத்தம் போன்ற பல தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் பெண் காவலர்கள் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு எடுத்ததற்கெல்லாம் காவல்நிலையத்திற்கு ஓடும் மனைவியரை விட மிகுந்த பரிதாபமான, மன உளைச்சல் மிக்க சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களை நாடி செல்லும் மனைவியருக்கு இந்த மகளிர் காவல்நிலையங்களில் ஏதாவது தீர்வு கிடைக்குமா? ஏற்கனவே பலவித மன உளைச்சலுடன் இருக்கும் காவலர்கள் இதுபோன்ற மனைவியர் தங்கள் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வரும்போது யார் குடி கெட்டால் நமக்கென்ன என்ற மனப்பான்மையுடன் வருகின்ற புகாருக்கெல்லாம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை ஏதும் செய்யாமல் வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். இதுதான் இன்று பல பொய் வரதட்சணை வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் குவிந்திருப்பதற்குக் காரணம்.

கடைசியில் அழிந்துபோவது யாருடைய வாழ்க்கை என்று உங்களுக்குத் தெரியுமா?


மதுரை:வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளாலும், குடும்பத்தினராலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் பெண் போலீசார், "கவுன்சிலிங்' பெற வழியின்றி, தற்கொலை முடிவை தேடுகின்றனர்.

அதேபோல், குடும்ப பிரச்னையுடன் வரும் பெண்களுக்கு, பெண் போலீஸ் பற்றாக்குறையால் "கவுன்சிலிங்' அளிக்க முடியவில்லை. ஈரோடு ஏட்டு வள்ளி(35), போலீஸ் அதிகாரிகளால் "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளான விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெண் போலீசாரின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க, அந்தந்த மாவட்டங்களில் எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, கடந்தாண்டு மார்ச் 14ல், மதுரை போலீஸ் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், டி.ஜி.பி., லத்திகா சரண் தெரிவித்தார்.அதிகாரிகளால் "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாகும் பெண் போலீசார், "புகார் கூறினால் வேலைக்கு ஆபத்தாகி விடும்' என தயங்குகின்றனர். சமீபத்தில், தென்மாவட்ட எஸ்.பி., ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறிய பெண் எஸ்.ஐ., வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். "இதுபோன்ற காரணங்களால், செக்ஸ் புகார்களை சொல்ல தயங்குகிறோம். அதையும் மீறி கூறினால், அசிங்கப்படுத்தப்படுகிறோம்,'' என பெண் போலீசார் புலம்புகின்றனர். இவர்களுக்கு "கவுன்சிலிங்' அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், பெண் போலீசார் தற்கொலை செய்கின்றனர். மதுரையில் மூன்று ஆண்டுகளில், நான்கு பெண் எஸ்.ஐ.,க்கள், இரு போலீசார் இறந்தனர். இவர்கள் தற்கொலைக்கு, வழக்கமாக சொல்லப்படும் "குடும்ப பிரச்னை, உடல்நலப்பிரச்னை' என காரணம் கூறப்பட்டது.

போலீசாருக்கு இந்த நிலை என்றால், அவர்களிடம் புகார் கூறவரும் சாதாரண குடும்ப பெண்களின் நிலைமை பரிதாபம். வரதட்சணை கொடுமை, பெண்கள் மீதான வன்கொடுமை போன்றவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க, மதுரையில் நகர், தெற்கு, வடக்கு ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷன் போலீசார், வழக்குப்பதிவு செய்யாமல், புகார்தாரர்கள் சமரசமாக செல்ல, "கவுன்சிலிங்' நடத்த சென்னையில் பயிற்சி பெற்றனர். புகார் செய்தவர்களின் ஊருக்கே சென்று "கவுன்சிலிங்' நடத்த ஒரு எஸ்.ஐ., இரு ஏட்டுகள், டாக்டர், தொண்டு நிறுவன ஊழியர், வக்கீல், மனவள நிபுணரைக் கொண்ட நடமாடும் குழுவும் உருவாக்கப்பட்டது.

இன்று ஆள் பற்றாக்குறையாலும், போலீஸ் துறை அல்லாதவர்கள் "கவுன்சிலிங்' செய்ய முன்வராததாலும், இக்குழு முடங்கி உள்ளது. இதனால், ஸ்டேஷனில் விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கடந்தாண்டு தெற்கு மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்த மேலபொன்னகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக கூறி, ஸ்டேஷன் முன் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த கணவரும் விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயன்றார். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, பெண் போலீசார் தைரியத்துடன் முன்வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் கொடுக்க வழிவகைகள் செய்ய வேண்டும். குடும்ப பெண்களின் பிரச்னை தீர, அனுபவம் வாய்ந்த, பயிற்சி பெற்ற ஏட்டுக்களை "கவுன்சிலிங்' செய்ய நியமிக்க வேண்டும். நடமாடும் "கவுன்சிலிங்' குழுவுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.