சென்னை:""புகார் கொடுக்க வந்தவரிடம், பணம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு, கட்டாய ஓய்வு அளித்தது செல்லும்,'' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரோஜா.புகார் கொடுக்க வருபவர்களிடம், அதன் மீது நடவடிக்கை எடுக்க பணம் கேட்பதாக, இவர் மீது எழுந்த குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டது. இதை அடுத்து செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி., சரோஜாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், சரோஜா மனு தாக்கல் செய்தார். பின், இம்மனு ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:விசாரணை அதிகாரியின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, சரோஜாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து, செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், லஞ்ச நடவடிக்கைக்கு முறையான தண்டனை, பணி நீக்கம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் மனுதாரரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கட்டாய ஓய்வு அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதாகவும், பணம் பெற்ற பின் நகல் அளித்ததாகவும், விசாரணையின் போது சரோஜாவின் முன்னிலையிலேயே சுரேஷ்பாபு என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது சாட்சியம் உறுதியானது. சாட்சியத்தை ஏற்றதற்கான காரணங்களை விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் செயல்பட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment