பெண்கள் ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் இந்த 21ம் நூற்றாண்டிலும் தன் காதலுக்காக ஒரு தியாகப்பெண் எந்தவகையான தியாகத்தை செய்திருக்கிறார் பாருங்கள். இவர்கள்தான் இந்தியத்தாயின் அணிகலன்களில் மின்னும் நவரத்தினக்கற்கள். இதுபோன்றவர்களைப் பாதுகாக்கத்தான் புதுப்புது சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏனென்றால் இவர்கள்தான் கொடுமைக்கார ஆண்களின் பிடியில் சிக்கி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டில்.
இந்திய ஆண்களின் கொடுமையில் சிக்கித்தவிப்பதை விட பாகிஸ்தான் காதலருடன் உல்லாசமாக இருக்கலாம் என்று முடிவு செய்து தனது சொந்த நாட்டையே தியாகம் செய்யும் அளவிற்கு இந்தியாவில் பெண்களுக்கெதிராக வரதட்சணை மற்றும் பெண்கொடுமை நடந்துகொண்டிருக்கிறது போலிருக்கிறது! இப்படித்தான் பெண்கள் அமைச்சகமும், மத்திய அரசும் பெண்கள் தொடர்பான ஒருதலைபட்சமான சட்டங்கள் இயற்றும்போது புள்ளிவிபரம் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்களின் புள்ளிவிபரக்கணக்கிற்கு இந்த செய்தி நன்கு உதவும்.
பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி தினமலர் மே 02,2010 நம்பிக்கை என்ற வார்த்தை பிறந்தபோதே, துரோகம் என்ற வார்த்தையும் பிறந்துவிட்டது. தனிப்பட்ட ஒருவருக்கு, தனிப் பட்ட காரணங்களுக்காக நம்பிக்கை துரோகம் செய்வது பெரிய விஷயம் அல்ல. இதனால், பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்து, நாட்டின் அதிமுக்கியமான ரகசியங்களைக் கையாளும் பணியையும் கொடுத்த தாய்நாட்டை, எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இந்த குற்றத்தை தான் செய்துள்ளார், மாதுரி குப்தா என்ற இந்தியாவைச் சேர்ந்த பெண் அதிகாரி.
மாதுரி குப்தா: காற்றில் அலை பாயும் 'கலரிங்' செய்யப்பட்ட கூந்தல், அறிவு ஜீவிகளின் அடையாளமான விலை உயர்ந்த மூக்கு கண்ணாடி, அலட்சியமான பார்வை, 53 வயது என்பதை நம்ப முடியாத தோற்றம், எப்போதும் உதட்டில் தேக்கி வைத்துள்ள மெல்லிய புன்னகை, இவற்றின் ஒட்டு மொத்த அடையாளம் தான் மாதுரி குப்தா. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்திய வெளியுறவு அலுவலகத்தின் மூத்த அதிகாரி; 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிகிறார். இதற்கு முன், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார். கடந்த 2007ல், பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டார்.
காதலும், பணமும்: மாதுரி குப்தாவுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த உளவுப்பிரிவு அதிகாரி ராணா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த காதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் பாக்., உளவு அதிகாரிகள். இந்தியாவிலிருந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வரும் முக்கியமான தகவல்களை எல்லாம், மாதுரி குப்தா மூலமாக பாக்., உளவு அதிகாரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெற்று வந்துள்ளனர். இதற்காக, மாதுரிக்கு தேவையான பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளனர். காதல், பணம் ஆகிய காரணங்களுக்காக, அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும், முக்கிய ஆவணங்களையும் கொடுத்துள்ளார் மாதுரி. பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 'ரா' உளவுப்பிரிவு அதிகாரிகள் பற்றிய தகவல்களையும், பாகிஸ்தானுக்கு அவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள் போன்றவற்றில் ராணாவும், மாதுரியும் அடிக்கடி சந்தித்து, தங்கள் காதலை பரிமாறிக் கொண்டதுடன், இந்திய அரசின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
வசமாக சிக்கினார்: மாதுரியின் நடவடிக்கைகள், இந்திய உளவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தனர். சில நாட்களுக்கு முன், சார்க் மாநாடு குறித்து பேச வேண்டும் என, மாதுரியை டில்லிக்கு வரவழைத்தனர். அப்போது, இந்தியாவின் ரகசியங்களை, பாகிஸ்தானுக்கு தெரிவித்த குற்றத்துக்காக மாதுரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்: மாதுரியிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இது மட்டுமல்லாமல், இஸ்லாமாபாத்தில் உள்ள 'ரா' (இந்திய உளவு அமைப்பு) தலைவர் ஷர்மாவே, பாகிஸ்தான் உளவாளி தான் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்ததோடு, பணத்துக்காவே இந்த குற்றத்தை செய்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், மாதுரிக்கும், முக்கியமான அதிகாரிகளுக்கும் இடையே ரகசியமான இ-மெயில்கள் பரிமாறப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
பெரும் சந்தேகம்: மாதுரி குப்தா விவகாரம், இந்திய பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்காகவும், பணத்துக்காகவும் ஒரு பெண் அதிகாரி இது போன்ற துரோகச் செயலை செய்துள்ளது, வெளியுறவுத் துறை அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாதுரி விவகாரத்தில், இயற்கையாகவே சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.
* பாகிஸ்தான் அதிகாரி ராணாவுக்கும், மாதுரிக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? இவர்களின் நட்புக்கான பின்னணியில் இருந்தவர்கள் யார்?
* இந்திய வெளியுறவுத் துறையின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களையும், ரகசிய விஷயங்களையும் கையாளும் அதிகாரம், இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய மாதுரிக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா?
* அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தெந்த ஆவணங்களை அவர் கையாண்டுள்ளார்?
* மாதுரி குப்தாவின் ரகசியமான நடவடிக்கைகளை, இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு காலமானது?
* பணம், காதல் இவற்றைத் தவிர, பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாதுரி செயல்பட்டதற்கான காரணங்கள் என்ன?
நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மாதுரி விவகாரம், சர்வதேச அளவில் தலைக்குனிவையும் ஏற்படுத்திவிட்டது என்பதையும் மறுக்க முடியாது. எதிரிகளின் கைகளுக்கு இனிமேலும், நம் நாட்டின் ரகசியங்கள் கிடைக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம். இந்த விஷயத்தில் மத்திய அரசு, மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், மேலே எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.
மாதுரியின் மறுபக்கம்: மாதுரி குப்தா, தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர். அடிக்கடி 'பியூட்டி பார்லர்'களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனது தலைமுடியை அடிக்கடி 'கலரிங்' செய்து கொள்வார். விலை உயர்ந்த அழகான உடைகளை அணிந்து கொள்வார். தனது வசீகரமான பேச்சின் மூலம், எப்படிப்பட்ட நபரையும் எளிதில் வளைத்து விடுவார். லண்டன் அல்லது வாஷிங்டனில் பணியாற்ற வேண்டும் என்பது இவரது கனவு. இஸ்லாமாபாத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, அவசரம், அவரமாக உருது மொழியைக் கற்றுக் கொண்டார். உருது மொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக ஒரு பெண்ணை ஆசிரியராக நியமித்துக் கொண்டார். வெகு விரைவிலேயே, உருது மொழியில் சரளமாக பேசவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். இதனால், பாகிஸ்தான் சென்ற உடனேயே, அங்குள்ளவர்களுடன் சகஜமாக பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பாகிஸ்தானில் உள்ள ஆங்கில மொழி பத்திரிகைகளை விட, உருது மொழி பத்திரிகைகளையே படிப்பதற்கு ஆர்வம் காட்டுவார். யாருடன் பேசினாலும், மேக்-அப், ஹேர் ஸ்டைல், உடைகள் பற்றித் தான் அதிகம் பேசுவார்.
திம்பு : 'பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இந்தியாவைப் பற்றிய ரகசியத் தகவல்களை கடத்திய இந்திய ஐகமிஷன் உயர் அதிகாரி மாதுரி குப்தாவின் கைது சம்பவம் கவலை அளிக்கக் கூடியது. அது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது' என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் இந்திய ஐகமிஷனின் உயர் அதிகாரி மாதுரி குப்தா. இவர், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.,யின் உயரதிகாரி ஒருவருக்கு இந்தியாவைப் பற்றிய ரகசிய தகவல்களைக் கடத்தியதாக, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் குறித்து, பூடான் தலைநகர் திம்புவில் நடக்கும் 'சார்க்' மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது: விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில்தான் , அவர் செயல்பட்ட விதம் , அதற்காக அவர் போட்ட திட்ட செயலாக்கங்கள் ஆகியவை தெரியவரும். அவர் தற்போது போலீஸ் பிடியில் இருக்கிறார். இச்சம்பவம் மிகவும் கவலை அளிக்கக் கூடியதுதான். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், உரிய நடைமுறைகளின் படி இந்திய அரசு அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் . இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் அரசு தூதரகத்தில் செயல்பட்ட அவரை திம்பு மாநாடு குறித்து அவசரமாகப் பேச வேண்டும் என்று கூறி அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது.