இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, April 22, 2010

கடமை தவறிய காவல்துறையும் கண்ணியம் காத்த அப்பாவிப் பெண்ணும்

இந்தியாவில் பல அப்பாவிப் பெண்களுக்கு காவல் நிலையம் எங்கிருக்கிறது என்றுகூட தெரியாத நிலையில் அறியாமையில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தப்பித்தவறி காவல் நிலையத்திற்கு சென்றாலும் அங்கு அவர்களை காவல்துறை மனிதர்களாகவே மதிப்பதில்லை. ஊதாசீனம் செய்து அவமானப்படுத்துகிறார்கள். இப்படியிருந்தால் அப்பாவிப் பெண்கள் எப்படி காவல்துறையை நம்புவார்கள்?

காவல்நிலையம் எங்கிருக்கிறது என்று தெரிந்த படித்த மேல்தட்டுவர்க்கப் பெண்கள் பக்குவமாக பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி தங்களின் ஆசையை பூர்த்திசெய்துகொள்கிறார்கள். காவல் நிலையம் எங்கிருக்கிறது என்று தெரியாத பெண்கள் கீழுள்ள செய்தியில் உள்ளதுபோல கொலைசெய்து தாங்களாகவே நீதியைத் தேடிக்கொள்கிறார்கள். சமூக ஆர்வலர்களும், சமுதாயப் புரட்சி பேசி திரிபவர்களும் இதுபோன்ற அப்பாவிப் பெண்களின் அறியாமையைப் போக்கவேண்டும்.

கீழுள்ள செய்தியில் பாருங்கள் கணவனை கொலைசெய்த பத்தினி சட்டத்தை மதித்து காவல்நிலையத்தில் சரணடையச்சென்றாலும் அங்கு அவர் எப்படி அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். பாவம் அந்த அபலைப் பெண். அவரது மனம் நீதிக்காக என்ன பாடுபட்டிருக்கும்.

இதுவே அந்தப் பெண் வரதட்சணை வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும். காவல்நிலையத்தில் ராஜமரியாதை கொடுத்து கவனித்திருப்பார்கள் (ஏனென்ற காரணம் தெரியாதவர்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவர்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவும்).

பாவம். செய்தியில் சொல்லப்பட்டுள்ள அந்த அபலைப் பெண்ணுக்கு இந்திய சட்டங்களைப் பற்றி போதிய விழிப்புணர்ச்சி இல்லை. அரசியலில் 33% வேண்டும் என்று போராடும் புரட்சிப் பெண்களும் அவர்களுக்குப் பின்னால் புதுமைப்பெண்கள் எங்களது கண்கள் என்று துதிபாடி நிற்கும் அடிப்பொடி புரட்சியாளர்களும் முதலில் இதுபோன்ற பெண்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பற்றியும், புகார் எப்படி எழுதுவது என்பது பற்றியும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டும்.


கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
தினமலர் ஏப்ரல் 23,2010

மேலூர்: சந்தேக கணவனை கொலை செய்த பெண் சரணடைய மேலூர் போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்து, நீண்ட அலைக்கழிப்புக்கு பின், போலீசாரை சந்தித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு தன் மீது தீராத சந்தேகம் கொண்டு துன்புறுத்திய கணவர் நல்லியப்பனை டி. தர்சானப் பட்டியில் அவரது மனைவி மலர், கணவன் தலையில் பாறாங்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தார்.

தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த மலர், வெட்டிய அரிவாளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அதிகாலை மேலூருக்கு வந்தார். நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு மேலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்குள்ளது என தெரியவில்லை. இதனால் கண்ணில் படும் பலரிடம் ஸ்டேஷன் எங்குள்ளது, என கேட்டபடி தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்குள்ளவர்கள் ஸ்டேஷனை காட்டவே, அங்கு சென்று வெளியில் நின்று கொண்டிருந்த போலீசாரிடம் பேச முயன்றுள்ளார். கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்திருந்த போலீசார் பரபரப்பில் இருந்தனர். இவரிடம் யாரும் பேச முன்வரவில்லை. எதுவாக இருந்தாலும் 10 மணிக்கு வா என அவரிடம் கூறி உள்ளனர்.

இரண்டு, மூன்று போலீசாரிடம் தகவலை சொல்ல முயன்றும் முடியாததால், போலீஸ் ஸ்டேஷன் ஓரமாக அவர் சென்று அமர்ந்து விட்டார். கொலை நடந்த இடத்திற்கு போன பிறகு தான், கொலையாளி தங்களை தேடி வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பதறிப் போன போலீசார் உடனடியாக ஒரு வேனில் அவரை ஏற்றிக் கொண்டு மீண்டும் சம்பவ இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். முடிவில் தானாக வந்து சரணடைந்த அவரை தாங்கள் கைது செய்ததாக கூறி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பெருமூச்சு விட்டனர்.




1 comment:

கரிகாலன் said...

தமிழ்நாடு காவல்துறையினர் மிகவும் நல்லவர்கள். மனிதகுல மாணிக்கங்கள்.

வாழ்க காவல்துறையினர்!
வளர்க அவர்கள் தொண்டு!

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.