நீதிபதிகள் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் மக்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். பல குடிகளை கெடுத்து தன்னை வளமாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தியாவிற்கு பொருந்தாத பல தவறான சட்டங்களை இயற்றி வருகிறார்கள் என்று சமீபத்தில் வந்த பல செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இப்படி கலாச்சாரத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் நீதிமன்றங்களை தவறாகப் பயன்படுத்தி குடும்பங்களை சிதைக்கும் பெண்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்களா? அல்லது பொய் வரதட்சணை வழக்கு மூலம் குடும்பங்களை சிதைக்கும் காவல் அதிகாரிகள் எத்தனை பேருக்கு தண்டனை அளித்திருப்பார்கள்? தெரியவில்லை.
குடும்பப் பிரச்சனைகளில் பொய் வழக்கு மூலம் பழிவாங்கத் துடிக்கும் இளம்பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பு எழுதுகின்றன என்று நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். படிப்பது ராமாயணம், இடிப்பது ராமன் கோயில் என்ற பழமொழி நினைவிற்கு வரும்!
சீரழிக்கும் மேற்கத்திய கலாசாரம்: நீதிபதிகள் பேச்சு
தினமலர் செப்டம்பர் 22,2012
தினமலர் செப்டம்பர் 22,2012
கோவை: மேற்கத்திய கலாசாரம் சீரழிக்கிறது என்று, பெண் வக்கீல்களின் முதல் மாநில மாநாட்டில், கருத்து தெரிவிக்கப்பட்டது.
கோவை பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மகளிர் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு ஆகியன சார்பில்,"முதல் மாநில மாநாடு,' கோவையில், நேற்று நடந்தது. கோவையில், ஐ.எம்.ஏ.,ஹாலில் நடந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க கூட்டமைப்புத் தலைவர் சாந்தகுமாரி, தலைமை தாங்கினார்.
வாதம் தான் பலம்: சிறப்பு அழைப்பாளர் ஐகோர்ட் நீதிபதி விமலா பேசியதாவது: நீதிமன்றங்களில், பெண்களுக்கே உரித்த போராட்ட குணம், ஒரு சில வக்கீல்களிடம் பார்க்க முடிகிறது. இதனால், அவர்களுக்கு, தங்களது வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என்ற, எண்ணம் ஏற்படுகிறது. தற்போது, மேலை நாடுகளில், வழக்குளை வீட்டில் இருந்தே தாக்கல் செய்வது, பதில் தெரிவிப்பது, வாதிடுவது ஆகிய நடைமுறைகள், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கின்றன. வெளியில் செல்ல பயந்த பெண்கள், வேலையில் இருப்பவர்கள், இம்முறையை பயன்படுத்த, உரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அமலுக்கு வந்துள்ள இம்முறை, நம் நாட்டுக்கு வர, வெகு தூரமில்லை. பெண்கள் வீட்டில் இருந்தபடியே, சாதிக்கலாம்; சாதிக்க முடியும். மேலை நாட்டு கலாசாரத்தை பின்பற்றுவதில், ஆர்வம் காட்டி வருகிறோம். அதே சமயம்,மேல்நாட்டவர்கள் நம்நாட்டுக்கு வந்து, நம்மிடையே உள்ள நல்லொழுக்கத்தை கற்றுக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையை, தற்சமயம் வளமாக்கி கொண்டுள்ளனர். ஆனால், நாம் மேல்நாட்டு கலாசாரத்தை பின்பற்றி, சீரழிந்து கொண்டுள்ளோம். இதை தடுக்க வேண்டும். அறியாமை, கிராமங்களில் அதிகம் காணப்படுகிறது; நகரங்களில், வெகுவாக குறைந்துள்ளது. வாதம் தான், வழக்குகளை வெற்றிக்கு இட்டுச் செல்லும். எனவே, வழக்குகளை புரிந்து கொண்டு, வாதிட்டு வெற்றி பெற வேண்டும், என்றார்.
ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி பேசும்போது,"வக்கீல் தொழிலில், வெற்றி பெறுவது அவரவர் மனத்தின்மையை பொருத்தது. வழக்கில் சொல்லப்பட்டிருப்பதை, நன்றாக புரிந்து கொண்டு,வாதிட வேண்டும். வாதம், வழக்கில் மிக முக்கியமான பகுதி; இதில், நம் திறமையை காட்டினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வேகமாக பரவிவரும் மேற்கத்திய கலாசாரம், கடவுள் நம்பிக்கையை குறைக்கிறது. இதனால், நம்மால் எதிலும் நிலைத்து நிற்க முடிவதில்லை,' என்றார்.
அகில இந்தியா பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆமீ யாஜ்னிக், ஐகோர்ட் சீனியர் பெண் வக்கீல் ஹேமா சம்பத், கோவை பார்கவுன்சில் தலைவர் நந்தகுமார், பெண்களுக்கான மாநில கமிஷன் சேர்மன் சரஸ்வதி ரங்கசாமி, மாவட்ட நீதிபதி ஆதிநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தமிழ்நாடு பெண் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் நிஷாபானு நன்றி கூறினார். கோவை மகளிர் வக்கீல்கள் சங்கத் தலைவர் தேன்மொழி வரவேற்றார். பிற்பகலில், "மீடியேசனில் பெண் வக்கீல்கள்' என்ற தலைப்பில், சென்னை ஐகோர்ட் வக்கீல் உமா ராமநாதன், பாரத் சக்கரவர்த்தி ஆகியோரும், "குழந்தைகளின் உரிமைகள்' பற்றி, நீதிபதி அலமேலு நடராஜன், குழந்தைகள் நல கமிட்டியின் முன்னாள் தலைவர் மனோரமா, சி.பி.ஐ.,சிறப்பு அரசு வக்கீல் கீதா ராமசேஷன் ஆகியோரும் பேசினர்.
No comments:
Post a Comment