Dinamalar News: June 10,2009
திருமண உதவி திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிய மேல்மலையனூர் ஒன்றிய சமூக நல விரிவாக்க பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தொரப்பாடியைச்சேர்ந்தவர் ஆறுமுகம். தனது மகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நடந்த திருமணத்திற்காக திருமண உதவித்திட்டம் மூலம் நிதி உதவி பெற மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கான தொகை அரசால் ஒதுக்கப்பட்டு காசோலை தயார் நிலையில் உள்ளது. இந்த காசோலையை தருவதற்கு மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் மஞ்சுளா 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, ஆறுமுகம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று காலை 8 மணிக்கு மஞ்சுளாவின் வீட்டிற்கு ஆறுமுகம் மகன் வேலுராஜா எடுத்துச் சென்றார். அவருடன் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா காசோலையை வேலுராஜாவிடம் கொடுத்துவிட்டு லஞ்சமாக 500 ரூபாயை வாங்கினார். அப்போது ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் கையும் களவுமாக மஞ்சுளாவை கைது செய்தனர். விசாரணைக்காக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு மஞ்சுளாவை அழைத்து சென்றனர்.
No comments:
Post a Comment