பிப்ரவரி 26,2013 தினமலர்
ஜோத்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிகளில் கழிப்பறை இல்லாததால், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று லட்சம் மாணவியர், படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி குழந்தைகள் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது; இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லாததால், கடந்த கல்வி ஆண்டில், 45 ஆயிரம் மாணவியர், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர்.
மூன்று ஆண்டுகளில், மொத்தம், மூன்று லட்சம் மாணவியர், இந்தப் பிரச்னைக்காக படிப்பை கைவிட்டுள்ளனர். முதல்வர் அசோக் கெலாட்டின் ஜோத்பூர் தொகுதியில், 144 பள்ளிகளிலும், மாநில கல்வி அமைச்சர், பிரிஜ்கிஷோர் சர்மாவின், ஜெய்ப்பூர் தொகுதியில், 236 பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை.
"வரும் ஏப்ரல் மாதத்திற்குள், அனைத்து பள்ளிகளிலும், மாணவியருக்கு, தனி கழிப்பறை வசதிகளை அமைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், இந்த நிலைமை காணப்படுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பை, மாணவ, மாணவியர் பாதியில் கைவிடுவதை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சில மாநில அரசுகளின் கவனக் குறைவால், இதுபோன்ற நிலைமை காணப்படுகிறது.