திருமணமாகி மாமியார் வீட்டிற்குச் செல்லும் மருமகள் கணவனின் குடும்பத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பயன்படுத்தும் அரசாங்க ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள். இதில் வயதான மாமியார்களை குறிவைத்து தாக்கும் வழக்கம் பல காலமாக இருந்து வருகிறது. இந்த வயதான தாய்மார்களை அரசாங்கமோ, காவல்துறையோ, நீதிமன்றங்களோ ஒரு பெண்ணாகவே மதிப்பதில்லை. இளம் மருமகள் சொல்வதை மட்டும்தான் காதில் வாங்குவார்கள். அதன்படி வயதான மாமியாரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். கேட்டால் பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்பார்கள்.
இதுபோன்ற அவலங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சூழலில் தமிழக முதல்வரின் அறிவுரை அனைத்து மருமகள்களுக்கும் தேவை.
அன்பை செலுத்தினால் வாழ்க்கை சிறக்கும் :ஜெ., அறிவுரை
தினமலர் மார்ச் 21,2012
சென்னை:""ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல், அன்பை செலுத்தினால் வாழ்க்கை சிறக்கும். கணவன், மனைவி இருவரும் சமம் என்ற கோட்பாட்டை புரிந்து கொண்டு நடந்தால் இல்லறம், நல்லறமாக அமையும்,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இல்லாள், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் துவங்கி நம் மூதாதையர்கள் சொல்லி வைத்து சென்றுள்ளனர். இல்லத்தை பராமரிப்பது முதல் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது வரை மனைவியின் பங்கு மிகப் பெரியது. அதேபோல் குடும்பத்திற்காக பொருள் ஈட்டும் கணவனின் பங்கும் அளப்பரியது.ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் அனைத்தையும் சாதிக்க வேண்டும். இருவரும் உயர்வு தாழ்வு கொள்ளாமல் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இத்தகைய புரிதலை தன்னகத்தே கொண்டு, புதுமண தம்பதிகள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்.
முதல்வர் சொன்ன குட்டி கதை:ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவரை எழுப்பிய கடவுள், "நான் உன்னை விட்டு போகலாம் என முடிவு செய்துள்ளேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்' என்றார். திடீரென கடவுள் எழுப்பி கேட்டதால், விவசாயி என்ன சொல்வது என தெரியாமல் விழித்தார். அதற்கு கடவுள், "ஒரு நாள் யோசித்து நாளை சொல்' எனக் கூறி மறைந்தார்.
பதறியடித்து எழுந்த விவசாயி, தன் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மனைவி, 'இப்போதிருக்கும் சொத்தைவிட இன்னொரு மடங்கு வேண்டும்' என்று கேளுங்கள்' என்றார். மகள், "உடுக்க துணி, உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் எப்போதும் வேண்டும் என கேளுங்கள்' என்றார்.மகன், "தரித்திரம் இல்லாத சுகமான வாழ்க்கை வேண்டும் என ஒரே வரமாக கேட்டு பெறுங்கள்' என்றார். ஆனால், விவசாயியின் தாய், "குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அனைவரும் அன்பாய், பிரியமாய் எப்போதும் இருக்க வேண்டும் என கேள்' என்றார்.
தாய் சொன்னபடி கடவுளிடம் விவசாயி கேட்டார். அதற்கு கடவுள், "அப்படியானால் நானும் என் முடிவை மாற்றி விடுகிறேன். அன்பும், பாசமும் இருக்கும் இடத்தில் தான் நான் இருக்க ஆசைப்படுவேன். சண்டை, சச்சரவுகள் இல்லாத இடம் தான் நான் வாழுகின்ற இடம். இனி உன்னோடு நான் இருப்பேன்' எனக்கூறி மறைந்தார். எனவே, அன்பும், பாசமும் இருக்கும் இடத்தில் தான் இறைவன் இருப்பார் என்பதை உணர்ந்து புது மண தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.