கோவை : மனைவியை, வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த இரும்பு வியாபாரியும், அதற்கு உடந்தையாக இருந்த, கல்லூரி பெண் விரிவுரையாளரும், கைது செய்யப்பட்டனர். அத்தப்பக்கவுண்டன்புதூர், வையாபுரி வீதியைச் சேர்ந்தவர் கவுதம், 30; பழைய இரும்பு வியாபாரி. சில ஆண்டுகளுக்கு முன், இதே பகுதியைச் சேர்ந்த கீதா, 26 வை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு பின், கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கீதா விசாரித்தார். கல்லூரி விரிவுரையாளர் உமாமகேஸ்வரி என்பவருடன், கணவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கள்ளத்தொடர்பு பற்றி, கணவரிடம் கீதா கேட்டார். அப்போது, "எனது தொழில் வளர்ச்சிக்கு, உமா மகேஸ்வரி தான் அனைத்து வழிகளிலும் உதவுகிறாள். உன்னுடன் வாழ வேண்டும் என்றால், உன் பெற்றோரிடம், ஐந்து லட்சம் ரூபாய், வாங்கி வர வேண்டும்' என, நிபந்தனை விதித்ததோடு, கீதாவை சித்திரவதை செய்தார். இதற்கு உடந்தையாக, கவுதமின் பெற்றோரும், மிரட்டல் விட துவங்கினர்.
இச்சூழலில், "உங்கள் மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள்?' எனக் கேட்டு, உமாமகேஸ்வரி எழுதிய கடிதம், கீதாவிடம் கிடைத்தது. கடிதத்துடன், வீட்டைவிட்டு வெளியேறிய கீதா,கோவை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கவுதம், கல்லூரி விரிவுரையாளர் உமா மகேஸ்வரி ஆகியோரை, கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய, கவுதமின் பெற்றோரை, போலீசார் தேடுகின்றனர்.
No comments:
Post a Comment