இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, January 14, 2010

கற்பழிப்பை வைத்து அரசியல் வியாபாரம்

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

தினமணி 14 Jan 2010

பெண்களிடம் கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டன வழங்கிட சட்டத்தில் தக்க மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மகளிர் ஆணைய தலைவர் கிரிஜா வியாஸ். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புதன்கிழமை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார்.

19 ஆண்டுகளுக்கு முன் 14 வயது ருசிகா என்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எதிரொலியாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களாக இருந்தால் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் அமைச்சரிடம் யோசனை தெரிவித்தார்.

அமைச்சரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது மிக மிக அவசியம். பாலியல் குற்றச்செயல்கள் தொடர்பான விளக்கத்தை விரிவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும தண்டனையை அதிகரிக்கவேண்டும். தற்போது உள்ள சட்ட விதிகள்படி பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும். இத்தகைய குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் ஆயுள் அல்லது 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்து சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் படவேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு தண்டனையை மேலும் கடுமையாக்க வழி செய்தாகவேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள் குறித்து மத்திய உள்துறைச் செயலர் தலைமையில் மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆராய்ந்து வருகிறது என்று சிதம்பரம் உறுதி அளித்தார். பெரும்பாலான கற்பழிப்பு வழக்குகளில் புகாரே பதிவு செய்யப்படுவதில்லை என்பது வேதனை தரும் விஷயம் என்றார் வியாஸ்.


=======================

திடீரென்று பெண்கள் நல்வாழ்வுத்துறை வாரியத் தலைவி கற்பழிப்புப் போன்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க இதுவரை நாட்டில் எந்த சட்டங்களும் இல்லாதது போல புதிதாக ஒரு வேடிக்கை செய்து கொண்டிருக்கிறார்.

இப்போதிருக்கும் சட்டங்களை செயல்படுத்தாமல் ஒரு DGPக்கு எதிரான கற்பழிப்பு வழக்கை பதிவு செய்யாமல் ஏமாற்றியது காவல்துறை. அதற்கு சட்டம் என்ன செய்யும்? அப்படி காலம் தாழ்த்தி பதிவு செய்யப்பட்ட வழக்கை விரைவாக விசாரிக்காமல் ஏமாற்றியது நீதித்துறை.
எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அவற்றை செயல்படுத்தப் போவது காவல் துறையும் நீதித் துறையும் தான் என்ற அடிப்படையை அரசியலார் காரணத்தோடு மறந்துவிட்டார்கள் போலுள்ளது.

புதிய கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தால் இதுபோல மற்றொரு DGP ஒரு வழக்கில் மாட்டி போலிஸ் வழக்கை பதிவுசெய்யாமல் ஏமாற்றினால் அப்போது கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்த அமைச்சர்கள் என்ன செய்ய முடியும்? மீண்டும் புதிய சட்டங்களை இயற்றுவார்களா?


அடிப்படை பிரச்சனையை தீர்க்க வழியை கண்டுபிடிக்காமல் இப்படி அடுக்கடுக்காக சட்டங்களை இயற்றினால் அவையெல்லாம் தவறான வழியில் தான் பயன்படுத்தப்படும். உண்மையான அப்பாவிகளுக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை. மேலும் மேலும் அதிகாரத்தில் இருக்கும் கிரிமினல்கள் தான் பலனடையப் போகிறார்கள்.
எப்போதும் நாட்டில் சட்டங்களுக்கு பஞ்சமே கிடையாது. புதிய பல சட்டப்பிரிவுகளை இயற்றி தானே பல பேரின் தொழிலே இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இன்று வரை நீதி கிடைக்காமல் ஒரு பெண் அலைக்கழிக்கப்பட்டதிற்கு காரணம் இந்த குற்றத்தை தண்டிக்க சட்டங்கள் இல்லாமல் போனதா காரணம்?


கர்நாடகாவில் "Pub" ல் பெண்கள் வெளியேற்றப்பட்டத்திற்கு வரிந்துகட்டிக்கொண்டு பல விசாரணைக் கமிட்டிகளை அனுப்பி பெண்களுக்கு "குடியுரிமை" வாங்கிக்கொடுக்க Pub நிரப்பும் போரட்டத்தை முன்னின்று நடத்த முழு முனைப்புடன் போராடிய பெண்கள் நல்வாழ்வு அமைச்சகமும், பெண்கள் வாரியமும் ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டி 19 ஆண்டுகளாக போரடிய இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு எந்த வகையில் உதவி செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வாங்கித் தர என்ன செய்திருக்கிறது? யாருக்காவது தெரியுமா?

19 ஆண்டுகளாக பெண்கள் அமைச்சகத்திற்கோ, பெண்கள் நல வாரியத்திற்கோ இந்த வழக்குப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போனது எப்படி? இதுபோன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வாங்கித் தரும் பணியல்லாமல் வேறு என்ன வகையான வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்?


இத்தனைக்கும் பெண்கள் அமைச்சகம், தேசிய பெண்கள் வாரியம், மாநில பெண்கள் வாரியம் என பல இருக்கின்றன. ஒருவர் கூட இந்த 19 ஆண்டுகளில் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லையே! மிகவும் வியப்பாக இருக்கிறது.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களை வைத்து எல்லோருமே வியாபாரம் செய்யத்தான் முயற்சி செய்கிறார்கள். யாருக்கும் உண்மையான அக்கறை கிடையாது.




No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.