கவுகாத்தி: அசாமில், 20 பேர் கொண்ட வெறிக் கும்பலால், இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மானபங்கத்தில் ஈடுபட்ட 20 பேரில், இதுவரை, நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது விருந்து:அசாமின் கவுகாத்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 9ம் தேதி இரவில், தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, மது விடுதிக்கு சென்றார். அங்கு, அவருக்கும், அங்கிருந்த மற்றும் சிலருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. மது விடுதி ஊழியர்கள், அவர்களை வெளியேற்றினர்.இதையடுத்து, அந்த இளம்பெண், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார். மது விடுதியில், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும், அவரை பின் தொடர்ந்து வந்தார். அந்த வழியாக சென்ற மேலும் சிலரும், அவரை பின் தொடர்ந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர், மது குடித்திருந்தனர். இளம்பெண்ணை, கேலி, கிண்டல்கள் செய்து கொண்டே, பின் தொடர்ந்து வந்தனர். ஆபாசமாகவும் பேசினர்.
வெறி:திடீரென, அந்த கும்பலில் இருந்தவர்கள், வெறி கொண்டு, அந்த பெண்ணை, கையை பிடித்தும், உடலைத் தொட்டும், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த பெண் கதறி அழுதும், அவர்கள் விடவில்லை. உடைகளை கிழித்து, விரட்டி விரட்டி மானபங்கப்படுத்தினர்.அரை மணி நேரம், இந்த கொடுமை நீடித்தது. இதற்கு பின்பே, போலீசார் அங்கு வந்தனர். அந்த வெறிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் "டிவி' சேனலின் கேமராமேன், அனைத்து கட்சிகளையும் படம்பிடித்தார். இந்த காட்சிகள், உள்ளூர் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. "யூ டியூப்' தளத்திலும், இந்த காட்சி ஒளிபரப்பானது.
இந்த கொடுமையான சம்பவம், தற்போது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குற்றம் செய்த 20 பேரில், நான்கு பேர் மட்டுமே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
பெண்கள் ஆணையம்:தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மம்தா சர்மா, இந்த சம்பவத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை, மன்னிக்கவே முடியாது.மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் ஆணையத்தின் சார்பில், ஒரு குழு, இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தவுள்ளது' என்றார். பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் கண்டனம் :"அசாமில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான, இதுபோன்ற சம்பவங்கள், கடும் கண்டனத்துக்குரியவை. இதுபோன்ற செயல்களை, அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.அப்படி எளிதாக எடுத்துக் கொள்வோரும், கண்டனத்துக்கு உரியவர்களே. இந்த விஷயம், மீடியாக்களின் மூலம், என் கவனத்துக்கு வந்துள்ளது. அசாம் முதல்வருடன், இதுகுறித்து பேசியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
விசாரணை கமிஷன்:இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலர் அமிலி சவுத்திரி தலைமையில் ஒரு நபர் அடங்கிய விசாரணைக் கமிஷனை, அசாம் மாநில அரசு அமைத்துள்ளது.
"டிவி' சேனல் விளக்கம்:இந்த சம்பவத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் நிர்வாகி செய்யது ஷாகிர் கூறுகையில், "இளம்பெண் ஒருவரை, ஒரு வெறிக்கும்பல் மானபங்கம் செய்தபோது, அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், கேமராவில் படம் பிடித்தது ஏன் என, எங்களை சிலர் கேட்கின்றனர். 20க்கும் மேற்பட்டோரை, கேமராமேன் ஒருவரால் எப்படி சமாளிக்க முடியும்? மேலும், இளம்பெண் ணை மானபங்கம் செய்தவர்களின் முகங்களை மட்டுமே, தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைத்துத் தான் ஒளிபரப்புகிறோம்' என்றார்.
==============
இந்த செய்தியைக் கண்டு தேசிய மகளிர் வாரியம் பொங்கி எழுந்துவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை விடுகிறார்.
ஆனால், கடந்த ஆண்டு ஆந்திராவில் இருந்த ஒரு மருமகள் தமிழ்நாட்டில் வாழும் கணவனின் அண்ணன் மனைவி மீது வரதட்சணை வழக்கை ஆந்திராவில் பதிவு செய்து ஆந்திர போலிஸ் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளூர் போலிஸிற்கு சட்டப்படி தகவல் சொல்லாமல் அந்தப் பெண்ணை கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றார்கள்.
அந்தப் பெண் ஒரு மருத்துவர், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியும் விடாமல் இரயிலில் அழைத்துச் சென்று கடைசியில் ரயில் பயணத்திலேயே அந்தப் பெண்ணின் கரு கலைந்து போனபிறகு பாதி வழியிலேயே அந்தப் பெண்ணை விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.
சட்டத்திற்குப் புறம்பாக நடந்த இந்தக் குற்றம் பெண்கள் வாரியத்தின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? இதுவும்தான் செய்தித்தாளில் வந்தது. எந்த அமைச்சரும் வாய் திறக்கவில்லை, எந்த பெண் அமைப்பும் கொடி பிடிக்கவில்லையே. ஏன்?
கேளிக்கையில் ஈடுபட மதுவிடுதிக்கு இரவில் சென்ற இளம் பெண்னை மானபங்கம் செய்தது மட்டும்தான் பெண்ணுக்கெதிராக இழைக்கப்படும் குற்றமாக இந்தியாவில் கருதப்படுமா? பட்டப் பகலில் நடுவீதியில் கர்ப்பிணிப் பெண்ணின் கரு அழித்த காவலர்களின் செயல் குற்றம் கிடையாதா? கருவிலேயே அழிக்கப்பட்ட சிசுவிற்கு இழைக்கப்பட்டது குற்றம் கிடையாதா? மது சாலைக்குச் சென்று குடித்து கூத்தடித்து மகிழும் பெண்கள் மட்டும்தான் இந்தியாவில் பெண்களாக கருதப்படுவார்களா?