இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 23, 2014

இந்தியக் குடும்பங்களை சிதைத்தால்தான் சாதனை புரிய முடியும்!

இந்தியாவில் பல ஆண்டுகளாக “பெண் உரிமை” என்ற பெயரில் பெண்களுக்கு தவறான வழிகாட்டுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் பல குடும்பங்கள் சிதைந்து நடுத் தெருவிற்கு வந்து நிற்கின்றன என்பதும் அனைவருக்கும்  தெரியும்.  இந்த சூழலில் விவாகரத்தான குடும்பத்தை ஒன்றிணைப்பதாகக்கூறி உயர்நீதிமன்றம் மார்தட்டிக் கொண்டிருக்கிறது.  மற்றொரு புறம் இந்திய அரசாங்கம் ஒன்றாக இருக்கும் குடும்பங்களை சிதைப்பதற்கு புதிய சட்டத்தை தயார் படுத்திக்கொண்டிருக்கிறது என்று இரண்டு விதமான செய்திகள் ஒரே செய்தித்தாளில் வந்திருக்கின்றன. 

குடும்பங்களை சிதைந்தாலும் சரி, சிதைந்த குடும்பத்தை சரிசெய்வதாக கூறிக்கொண்டாலும் சரி நீதிமன்றங்களுக்கும், சட்டம் படித்தவர்களுக்கும், காவல்துறைக்கும் நல்ல வருமானம் இருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இனி இந்தியக் குடும்பங்களின் நிலை என்னவாகுமோ?



பிப்ரவரி 23,2014 தினமலர்


சென்னை: குடும்ப நல கோர்ட்டில், விவாகரத்து பெற்ற தம்பதி, உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் முயற்சியால், சமாதானம் ஆகினர். ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதாக, உத்தரவாதமும் அளித்தனர்.

கருத்து வேறுபாடு : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பழனியப்பன். மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும், மனோரஞ்சிதம் என்பவருக்கும், திருமணம் நடந்தது.

இவர்களுக்கு, மூன்று பெண், ஒரு ஆண் என, நான்கு குழந்தைகள். மூத்த மகள், கல்லூரியில் இறுதி ஆண்டும், மற்ற மூவர், பள்ளியிலும் படிக்கின்றனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். குழந்தைகள், தாயார் கவனிப்பில் இருந்தனர்.
சேலம், குடும்ப நல கோர்ட், விவாகரத்து வழங்கியது. அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனோரஞ்சிதம், அப்பீல் மனு தாக்கல் செய்தார். சேலம் கோர்ட் உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இவ்வழக்கு, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், தேவதாஸ் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் முன், மனோரஞ்சிதம், பழனியப்பன் ஆஜராகினர். அவர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, கல்யாணராமன் ஆஜராகினர்.

உத்தரவு : கணவன், மனைவி இருவருக்கும், நீதிபதிகள் அறிவுரை கூறினர். அவர்களை சமாதானப்படுத்தி, சேர்ந்து வாழுமாறு கூறினர். வழக்கறிஞர்களும், உதவியாக இருந்தனர்.  இந்த சமாதான முயற்சி, வெற்றியில் முடிந்தது. கணவருடன், அவரது வீட்டில், குழந்தைகளுடன் சேர்ந்து வாழ, மனோரஞ்சிதம் சம்மதம் தெரிவித்தார்; அதற்கான மனுவையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: இந்து திருமண சட்டம், குடும்ப நல கோர்ட்கள் சட்டம், சமாதான நடவடிக்கைகளை தான் வலியுறுத்துகின்றன. இந்த தொடர் நடவடிக்கைக்கு, எந்த முடிவும் கிடையாது. வழக்கறிஞர்களின் துணையுடன், சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதற்கு வெற்றி கிடைத்தது. பிரிந்து இருந்த இருவரும், ஒன்றாகச் சேர்ந்து வாழ, முடிவு செய்துள்ளனர். மாமனாரையும் கவனித்துக் கொள்வதாக, மனோரஞ்சிதம் கூறியுள்ளார். மனைவி, குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக, கணவர் பழனியப்பனும் கூறியுள்ளார்.

உறுதிமொழி : எனவே, குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு மனோரஞ்சிதம் செல்ல வேண்டும். மகளையும், அவரது குழந்தைகளையும், மருமகன் வீட்டில், மாமனார் விட வேண்டும். குழந்தைகளின் படிப்புக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது. கோர்ட் அளித்த உறுதி மொழியை, இருவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும் சட்டத் திருத்தம் 
கண்ணன் என்பவர் தினமலருக்கு எழுதிய கடிதம்
 பிப்ரவரி 17,2014 தினமலர்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நமது அரசியல் சட்டம் கூறுகிறது; ஆணும் பெண்ணும் சமம் என்று நம்புபவன்; அதன் மூலம் நாட்டை முன்னேற்ற நினைப்பவன் நான். ஆனால் தற்போது குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கும் பல சட்டங்களைக் அரசு கொண்டுவருகிறது.

2013ம் வருடத்திய இந்து திருமண திருத்த மசோதாவின் படி, ஒரு பெண் விவாகரத்து கோரி்ப் பெற்றால், அவருக்கு கணவரின் சொத்தில் பாதி வழங்கப்பட வேண்டும். கணவரின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், திருமணத்திற்கு முன் சேர்த்த சொத்தாகவும் இருந்தாலும், அதில் பாதியைப் பெற விவாகரத்து கோரும் மனைவிக்கு உரிமை உண்டு என்கிறது இந்த புதிய சட்டத்திருத்தம். மேலும் மனைவி விவாக ரத்து கோரினால் அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை.

இது சட்டமாக மாறினால், அது சமுதாயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த திருத்த மசோதா ஒரு தலைப்பட்சமானது; பாரபட்சமான இத்தகைய சட்டங்களை எதிர்க்க வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற விடக்கூடாது.

இந்த திருத்த மசோதாவை மேலோட்டமாக படித்தாலே, நாம் திருமணம் இல்லாத ஒரு சமுதாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்ிழோம் என்பது தெளிவாகும். இதனால் முறையற்ற உறவுகளும் தந்தையர் இல்லாத குழந்தைகளும் உருவாகும் நிலை ஏற்படும்.

பொறுப்பற்ற பெண்களுக்கு இந்த சட்டத் திருத்தம் மேலும் ஒரு அராஜக ஆயுதமாக கிடைத்து விடும். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதென்பது, ஆண்களின் உரிமைகளை ஒடுக்குவதாக இருக்கக்கூடாது.

இந்த புதிய சட்டத் திருத்ததின்படி, மனைவி விவாகரத்து கோரினால், கணவனால் அதை மறுக்க முடியாது. இது அரசியல் சட்டத்ததுக்கு எதிரானதல்லவா? ஏன் கணவன் விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்யக்கூடாது? விவாகரத்து பெறும் மனைவிக்கு கணவனி்ன் பரம்பரைச் சொத்திலும், சுயமாக சேர்த்த சொத்திலம் பங்குஎன்பது எப்படி நியாயம்? ஒரு நாள் மனைவியாக இருந்தாலும், கணவனின் பரம்பரைச் சொத்திலும், அவன் உழைப்பால் சேர்த்த சொத்திலும் உரிமை கோருவதென்பது அர்த்தமற்றதாக இருக்கிறதே.

சொத்தில் பங்கு கேட்பதற்கு, குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டு்ம் என்று நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சட்டம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்க வேண்டு்ம்; கணவன் விவாகரத்து கோரினால் அதை எதிர்க்க மனைவிக்கு உரிமை இருக்கும்போது, மனைவி கோரும் விவாக ரத்தையும் எதிர்க்க கணவனுக்கு உரிமை தரப்பட வேண்டும்.

விவாகரத்தின்போது பரபம்பரைச் சொத்தை கணக்கில் கொள்ளக்கூடாது. நிதிநிலைச் சிரமம் என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்; இல்லையேல் பெண்கள் இதையே வியாபாரமாக கருதி விடக்கூடும்.

இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தையும், இநத் திருமணத்தால் இருவருக்கும் ஏற்பட்ட இழப்பையும் கருத்தில் கொண்டு நிதி .உதவி நிர்ணயிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் விவாகரத்து வழங்கப்படும் முன் நிர்ணயிக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள வரதட்சணைக் கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துவதால் எத்தனை ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த சட்டங்கள் அப்பாவி பெண்களுக்கு பயனுள்ளவைதான்; ஆனால் வேண்டுமென்றே தவறும் செய்யும் பெண்கள் இதை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

நிறைவாக இந்த பதிய திருத்த சட்டத்தால் குடு்ம்ப ஒற்றுமையை நாம் இழப்போம்; தற்கொலைகள் அதிகரிக்கும். குழந்தைகள் தாய் தந்தையர் கவனிப்பின்றி அனாதைகளாக அடிமைகளாக மாற்றப்படுவர். இததகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, இப்போதே நடவடிக்கை எடுப்பார்களா? .

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.